திமுக என்ற தீய சக்தியை ஒழிக்கவே எம்ஜிஆர்., அதிமுக.,வை தோற்றுவித்தார்

பிரச்சாரத்தில் முதலமைச்சர் பேச்சு

கோவை : தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாள் பயணமாக கோவை வந்துள்ளார். அதன்படி இரண்டாவது நாளன இன்று காலை புளியகுளம் விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு சிங்காநல்லூரில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

முதலமைச்சர் வருகையையொட்டி சிங்காநல்லூர் பேருந்து நிலையம் முன்பு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர். மேளதாளம் முழங்க முதலமைச்சருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

சிங்காநல்லூர் பகுதியில் பிரச்சாரத்தில் முதலமைச்சர் பேசுகையில், ஸ்டாலின் தற்போது புதிய நாடகம் ஒன்றை போட துவங்கிவிட்டார். இறை பக்தி இருந்தால் தான் அருள் கிடைக்கும். நாடகம் போட்டால் இறைவன் சரியான தீர்ப்பை வழங்குவார். தேர்தல் வந்தால் அத்தனை நாடகமும் போடும் ஒரு நடிகர் ஸ்டாலின். வடநாட்டில் இருந்து வந்திருக்கும் பிரசாந்த் கிஷோர் தான் டைரக்டர். ஏற்கனவே கோவையிலும் ஒரு நாடகத்தை அரங்கேற்றினார். ஆனால் அது கை கொடுக்கவில்லை. போகுமிடத்தில் எல்லாம் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டுப் போகிறார். மக்களை ஏமாற்றி முதல்வர் கனவு காண வேண்டாம். இதனால் தான் தொழில்துறையினர் தமிழகம் நோக்கி வருகின்றனர். 13 ஆண்டு காலம் மத்தியில் கூட்டணி வைத்து ஆட்சி செய்தது திமுக. அப்போது என்ன நல்லது செய்தது.? அவர்கள் குடும்பம் மட்டும் தான் வளர்ந்தது. அதிமுக ஆட்சியில் கோவையில் பிரம்மாண்ட பாலங்கள் அமைத்துக் கொடுத்திருக்கிறோம். கூட்டு குடிநீர் வசதி, புதிய கல்லூரி உள்ளிட்ட பல திட்டங்களை கோவைக்கு கொடுத்திருக்கிறோம். திமுக ஆட்சியில் என்ன திட்டம் கொண்டு வந்தார்கள்?

திமுக தலைவர் டெல்லிக்குச் சென்றால் மகனுக்கு, மகளுக்கு, பேரனுக்கு என்று பதவிக்காக செல்வார்கள். திமுக என்ற தீய சக்தியை ஒழிக்கவே எம்ஜிஆர்., அதிமுக.,வை தோற்றுவித்தார். அதிமுக அரசு அனைத்து துறைகளிலும் தேசிய விருதுகளை வாங்கி வருகிறது. உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கியுள்ளார். ஸ்டாலின் எந்த தேசிய விருதை வாங்கினார் ? தைப்பொங்கல் கொண்டாட 2500 ரூபாய் மக்களுக்கு வழங்கியுள்ளது இந்த அரசு.

ஊரடங்கு காலத்தில் விலையில்லா அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே 100 யூனிட் மின்சாரம் இலவசமாக கொடுக்கும் மாநிலம் தமிழகம் தான். கேரளாவில் 100 யூனிட்டுக்கு 650 ரூபாய் கட்டணம் கட்டவேண்டும். வருடத்திற்கு 8000 ரூபாய் என்றால் ஐந்து வருடத்திற்கு 40 ஆயிரம் ரூபாய் மக்களுக்கு மின்சாரத்தில் சலுகை அளிக்கப்படுகிறது. இந்த இலவச மின்சாரம் ஸ்டாலின் வீட்டிற்கும் செல்கிறது. திமுக தொண்டர்கள் வீட்டிற்கும் செல்கிறது. கொரோனா காலத்தில் நிவாரணப் பொருட்களை கட்சி சார்பற்று மக்கள் அனைவருக்கும் வழங்கினோம். இந்த தேர்தலில் அதிமுக ஆட்சி தொடர மக்கள் வாக்களிப்பார்கள் என முதலமைச்சர் பேசியுள்ளார்.