தமிழக முதல்வருக்கு மாஸ்டர் படக்குழு நன்றி!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் கடைசி வாரத்தில் திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் திரையரங்க உரிமையாளர்கள், பணிபுரியும் தொழிலாளர்கள் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டனர். புதிய படங்கள் திரைக்கு வராததால் திரைத்துறையும் முடங்கியது.

இதையடுத்து ஊரடங்கில் படிப்படியாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு 2020-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டன. அப்போது 50% இருக்கைகளை நிரப்பிக் கொள்ளலாம் என தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனாலும் பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீசாகாததால் தியேட்டருக்கு அதிக அளவில் மக்கள் வரவில்லை. இதனால் பெரும்பாலான திரையரங்குகள் மீண்டும் மூடப்பட்டன.

இதனிடையே இருக்கைகளை நிரப்புவதில் 50 சதவிகத்தை 75 சதவிகிதமாக உயர்த்தி உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென திரைப்பட உரிமையாளர்கள் தரப்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பொங்கலுக்கு ‘மாஸ்டர்’ படம் திரைக்கு வருவதால் தியேட்டரில் 100% இருக்கைகளுக்கு அனுமதி கேட்டு நடிகர் விஜய் தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்ததாக தகவல்கள் வெளியாகின.

ஆனால், ஜனவரி 31-ம் தேதி தளர்வுகள் உடன் ஊரடங்கு தொடரும் என அறிவித்த தமிழக அரசு, திரையரங்களுக்கு தளர்வுகள் எதுவும் அறிவிக்கவில்லை. இந்நிலையில், நேற்று இடைக்கால அறிவிப்பாக உரிய பாதுகாப்பு நடைமுறைகளை திரையரங்குகள் கடைப்பிடித்து 100% இருக்கைகளுடன் இயங்கலாம் என தமிழக அரசு அறிவித்தது.

தமிழக அரசின் இந்த உத்தரவு திரைத்துறையினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில், மாஸ்டர் படக்குழு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளது. மேலும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கும் படக்குழு சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.