தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் தேவேந்திர குல மக்கள்

தேவேந்திர குல வேளாளர்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொங்கு மண்டல தேவேந்திர குல வேளாளர் மக்கள் சுமார் இரண்டு இலட்சம் பேர் பங்கேற்கும் மாபெரும் ‘நன்றி அறிவிப்பு’ மாநாட்டை நடத்த உள்ளதாக அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் பட்டியல் இனத்தில் உள்ள 7 பிரிவுகளை உள்ளடக்கி தேவேந்திரகுல வேளாளர் என்று பொதுப்பெயரிடக் கோரி  நீண்ட காலமாக தேவேந்திர குல மக்கள் கோரிக்கைகள் விடுத்து வந்தனர்.

இந்நிலையில் மாநில அரசின் பரிந்துரை மீது மத்திய அரசின் உத்தரவைப்பெற உரிய நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ளும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து, தமிழக முதல்வரின் அறிவிப்பிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஆலோசணை கூட்டம் கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தை எதிரில் உள்ள ஆதி காம்ப்ளக்ஸ் வளாகத்தில் நடைபெற்றது. பேரவையின்  நிறுவன தலைவர் மனு நீதி சோழன் தலைமையில் நடைபெற்ற இதில், தீபம் முனியப்பன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தேவேந்திர குல வேளாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வர் மற்றும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் தேர்தலுக்கு முன்னர் இதற்கான அரசாணையை வெளியிடும் பட்சத்தில் கொங்கு மண்டல தேவேந்திர குல வேளாளர் மக்கள் சுமார் இரண்டு இலட்சம் பேர் பங்கேற்கும் மாபெரும் நன்றி அறிவிப்பு மாநாட்டை நடத்த உள்ளதாக மனு நீதி சோழன் தெரிவித்தார்.