மூலப்பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி தொழில் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

மூலப்பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி கோவையில் தொழில் அமைப்புகள் இணைந்து கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிரைண்டர், மோட்டார் மற்றும் பவுண்டரி தொழில்களுக்கான மூலப்பொருட்கள் விலை பொது முடக்க காலத்திற்குப் பிறகு கடுமையாக உயர்ந்துள்ளது. மூலப்பொருட்களின் விலை 20 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை அதிகரித்துள்ளதால் தொழில்துறையினர் கடுமையான அவதிக்குள்ளாகி வருகின்றனர். மூலப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்கனவே தொழில்துறையினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த சூழலில் கோவையைச் சேர்ந்த தொழில் அமைப்புகள் ஒன்றிணைந்து மூலப்பொருட்கள் விலையை கட்டுப்படுத்த கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை மாவட்ட தொழில் கூட்டமைப்பினர் மூலப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த கோரி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாளை முதல் பவுண்டரிகள் மொத்தமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.