திருப்பதியில் வி.ஐ.பி. தரிசனம் ரத்து!

 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 7ம் தேதி முதல் 10 வாரங்களுக்கு வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கோடை விடுமுறையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் தேவஸ்தானம் நடவடிக்கை.

திருப்பதிக்கு வரும் மத்திய அமைச்சர்கள், அம்மாநில அமைச்சர்கள், அந்த தொகுதியில் இருக்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் விஐபிகளாக கருதப்படுகின்றனர். அங்கு தனி நபராக வரும் வி.ஐ.பிக்களுக்கு, அவரது உறவினர்களுக்கு மற்றும் அவரது பரிந்துரை கடிதம் எடுத்து வருவோருக்கு என மொத்தம் மூன்று வகைகளில் வி.ஐ.பி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில், கோடை விடுமுறையை முன்னிட்டு பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என்பதால் ஏப்ரல் 7ம் தேதி முதல் வி.ஐ.பி.க்கள் பரிந்துரைக்கும் நபர்களுக்கு தரிசனம் கிடையாது என திருப்பதி தேவஸ்தான கமிட்டி அறிவித்துள்ளது. பதவிகளில் இருக்கும் வி.ஐ.பி.க்களுக்கு மட்டுமே இதில் விலக்கு அளிக்கப்படுவதாக  கூறப்பட்டுள்ளது.