ஆன்லைன் மூலம் சினிமா டிக்கெட்டிற்கு வசூலிக்கப்படும் கூடுதல் பணத்திற்கு கேளிக்கை வரி இல்லை

-உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆன்லைன் மூலம் சினிமா டிக்கெட் முன்பதிவு செய்யும் போது கூடுதலாக வசூலிக்கப்படும் 30 ரூபாய்க்கு கேளிக்கை வரி விதிக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திரையரங்குகளில் ஆன்லைன் மூலம் சினிமா டிக்கெட் முன்பதிவு செய்யும் போது கூடுதலாக 30 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இந்த ஆன்லைன் கட்டணத்துக்கு கேளிக்கை வரி விதிக்கும் வகையில், கேளிக்கை வரி கணக்கை மறுமதிப்பீடு செய்யும் வணிகவரித்துறை உத்தரவை எதிர்த்து தனியார் திரையரங்கு குழுமம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யபட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் எம்.எஸ்.ரமேஷ் அடங்கிய அமர்வு, திரையரங்குகளில் நுழைவதற்கு விதிக்கப்படும் கட்டணத்துக்கு மட்டுமே கேளிக்கை வரி விதிக்க முடியும் எனவும், ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணத்துக்கு கேளிக்கை வரி விதிக்க முடியாது என உத்தரவிட்டனர். திரையங்குகளில் வரிசையில் நிற்காமல் மொபைல் போன் மூலமாக முன்பதிவு செய்வதற்கு வசதி செய்து கொடுப்பதற்காக கூடுதலாக வசூலிக்கப்படும் 30ரூபாய் கேளிக்கை வரிக்கு உட்படுத்தபடாது என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். ஆன்லைன் முன்பதிவு கட்டணத்துக்கும் கேளிக்கை வரி விதிக்கும் வகையில் கேளிக்கை வரி கணக்கை மறு மதிப்பீடு செய்யும் வணிக வரித்துறை உத்தரவை ரத்து செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.