ஏழை மாணவனுக்கு மருத்துவ கல்வி உதவி தொகை

வெளிநாட்டில் மருத்துவம் படித்து கொண்டிருக்கும், ஏழை தொழிலாளி மாணவருக்கு தொடர்ந்து இரண்டாவது கட்டமாக கல்வி உதவி தொகையை நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் அன்பரசன் வழங்கினார்.

சென்னை கொடுங்கையூர் பகுதியை ஆதிலட்சுமி, தம்பதியரின் மகன் சுபாஷ். பெற்றோர்கள் இருவரும் கூலி வேலை செய்து வரும் நிலையில், தனது சொந்த முயற்சியில் ரஷ்யாவில் மருத்துவம் பயின்று வருகிறார். கடந்த இரு ஆண்டுகளாக கஷ்டப்பட்டு மகனுக்கு கல்வி கட்டணம் செலுத்திய பெற்றோரால், மூன்றாவது ஆண்டு கட்டணத்தை கட்ட முடியவில்லை இதனால் ரஷ்யாவில் 3ம் ஆண்டு மருத்துவம் படிக்கும்  மாணவர் சுபாஷ் படிப்பை பாதியிலேயே கைவிடும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் இந்த செய்தியறிந்த நல்லறம் அறக்கட்டளை தலைவர் அன்பரசன், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவனின் பெற்றோரை கோவை வரவழைத்து முதல் கட்டமாக ரூபாய் ஒரு இலட்சத்திற்கான காசோலையை வழங்கியிருந்தார். இந்நிலையில் இன்று மாணவணின் மருத்துவ கல்விக்கென இரண்டாம் கட்டமாக ரூபாய் ஒரு லட்சத்து பதினேழாயிரம் ரூபாயை மாணவனின் குடும்பத்தினரிடம் வழங்கினார்.

ஏழ்மையில் இருக்கும் மாணவர்களுக்கு நல்லறம் அறக்கட்டளை தொடர்ந்து உதவிகள் செய்து வரும் நிலையில், ஏழை மாணவன் சுபாஷின் மருத்துவ கல்வியை முழுதாக ஏற்று கொண்டுள்ளது பலரின் பாராட்டையும் பெற்று வருகிறது.