விதைப் பரிசோதனை செய்வது அவசியம்

“விதையில் கவனம் அறுவடையில் மகிழ்ச்சி” என்பதற்கேற்ப விவசாயிகள் சாகுபடி செய்ய உள்ள விதைகளில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியமாகும்.  நல்ல தரமான விதைகள் நல்விளைச்சலுக்கு ஆதாரமாகும். நல் விதைகள் என்பது குறிப்பிட்ட தர நிர்ணயத்திற்குள் முளைப்புத்திறன், ஈரப்பதம், புறத்தூய்மை, பிற இரக கலப்பு ஆகியவற்றை கொண்டதாகும். விதைகளின் இத்தரத்தை நிர்ணயிப்பதில் விதைப் பரிசோதனை நிலையங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. விதை உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்துள்ள விதைகளை விதைப் பரிசோதனை நிலையங்கள் பரிசோதனை மேற்கொண்டு விதைகளின் தரத்தை உறுதி செய்கிறது.

அவ்வாறாக உறுதி செய்யப்பட்ட விதைக் குவியல்களுக்கு விதை சான்றளிப்புத்துறை சான்று அட்டை வழங்குகிறது. இச்சான்று விதைகளே தரமான முளைப்புத்திறன், ஈரப்பதம், புறத்தூய்மை, பிற இரக கலப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய நல்விதைகளாகும். நல்விதைகளே நல்விளைச்சலுக்கு ஆதாரமாகிறது. இதுபோல் விவசாயிகள் சான்று விதைகள் இல்லாமல் தாங்கள் வைத்துள்ள விதைகளையே மறு போகத்திற்கு உபயோகிக்கும் போது அவ்விதைகளை பரிசோதனை செய்து தரத்தை அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகும். விதைப் பரிசோதனை நிலையங்கள் மிகக் குறைந்த கட்டணத்தில் விதைகளை பகுப்பாய்வு செய்து விதைகளில் தரத்தை தெரிவிக்கிறது.

ஒரு மாதிரிக்கு ரூ.30 என்ற வீத அடிப்படையில் வசூலிக்கப்பட்டு,  விதைகளின் முளைப்புத்திறன், புறத்தூய்மை, ஈரப்பதம் மற்றம் பிற இரக கலப்பு ஆகியவற்றை கண்டறிவிக்கிறது. இவ்வாறு கோவை விதைப் பரிசோதானை அலுவலர் கணேசன், கேட்டுக் கொள்கிறார். மேலும், விபரங்களுக்கு விதை பரிசோதனை அலுவலர் விதை பரிசோதனை நிலையம் 1424ஏ, தடாகம் ரோடு கோவை என்ற முகவரியை அணுகுமாறும்,  0422-2981530 என்ற  தொலைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொள்ளுமாறும் கூறினார்.