ஒற்றைக்காலில் நின்று விவசாயிகள் போராட்டம்

காட்டுப்பன்றி, மயில், மரநாய் உள்ளிட்ட விலங்குகளிடமிருந்து விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஒற்றைக்காலில் நிற்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனைமலை தாலுகாவிற்கு உட்பட்ட அங்கலக்குறிச்சி, சேத்துமடை, ஆழியாறு, காளியாபுரம், அம்பராம்பாளையம், வேட்டைக்காரன்புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தென்னை விவசாயம் மற்றும் பணப் பயிர்களான தக்காளி, காய்கறிகள் உள்ளிட்டவை பயிர் செய்யப்பட்டு வருகின்றன.

தென்னை விவசாயத்தில் தேங்காய் ஆரம்ப நிலையான குப்பைகளை மர நாய்களும் பூனைகளும் சேதப்படுத்துவதால் தென்னை விவசாயம் பெருமளவு பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் காட்டுப்பன்றி தாக்குதலாலும் மயில்களாலும் பணப் பயிர்கள் விவசாயம் பெருமளவு பாதிக்கப்படுவதாக புகார் தெரிவித்தனர்.

இதனால் விலங்குகளிடமிருந்து விவசாயத்தை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஒற்றைக்காலில் நிற்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சு.பழனிச்சாமி, விலங்குகளால் தங்களது விவசாய உற்பத்தி பாதிக்கப்படுவதால் பொருளாதார நஷ்டம் ஏற்பட்டு பெருமளவு  மன உளைச்சலுக்கு விவசாயிகள் ஆளாக வேண்டிய சூழல் உருவாகி உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் வனவிலங்குகளால் பாதிக்கப்படும் விவசாயிகளை பாதுகாக்க மாவட்ட நிர்வாகமும் வனத்துறையும் உரிய நடவடிக்கை எடுத்து விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.