தனியார் பள்ளியில் அதிக கல்விக் கட்டணம் வசூலிப்பதாக புகார்

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் படிக்கும் குழந்தைகளுக்கு தனியார் பள்ளி நிர்வாகம் அதிக கல்விக் கட்டணம் கேட்பதாக குழந்தைகளின் பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.

கோவை சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்தவர் அப்பாஸ் அலி. இவருக்கு 10 வயதில் ஒரு மகனும் 6 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஐந்தாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு படித்து வருகின்றனர்.

இந்த 2 மாணவர்களுக்கும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் அரசு சலுகையில் தனியார் பள்ளியில் கல்வி வழங்கப்பட்டு வருகிறது.இந்த சூழலில் தனியார் பள்ளி நிர்வாகம் மாணவர்களிடம் அதிக கல்விக் கட்டணத்தை கேட்பதாகவும் கல்வி கட்டணம் கட்ட முடியவில்லை என்றால் வேறு பள்ளியில் சேர்ந்து கொள்ளுமாறு கூறுவதாகவும் அப்பாஸ் அலி குற்றம்சாட்டுகிறார்.

இந்த சூழ்நிலையில் இவர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார் அதில் குழந்தைகளின் கல்வி உரிமையை மீட்டுத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.