மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு

கோவை மாநகராட்சிக்குட்பட்ட தெற்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் மத்திய மண்டலம் காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டிலுள்ள தனியார் துணிக்கடையை சுற்றியுள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை பார்வையிட்டு, தூய்மைப்பணியாளர்களிடம் தினமும் காலை மற்றும் மாலை ஆகிய இருவேளைகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற வேண்டுமென தெரிவித்தார்.

அப்பகுதியில் உள்ளவர்களிடம் சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக கொரோனா மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். நோய் எதிர்ப்பு சக்திக்காக வழங்கப்பட்ட மாத்திரைகளை உட்கொள்ள வேண்டுமெனவும், கபசுர குடிநீர் பருகவேண்டுமெனவும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க பொதுமக்கள் அனைவரும் அரசு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு தந்து நல்கிடவேண்டுமென கேட்டுக்கொண்டார்.

இதனை தொடர்ந்து, மத்திய மண்டலம் சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் செயல்படுத்தப்படவுள்ள சிறப்பு கொரோனா சிகிச்சை மையம், பாலக்காடு மெயின் ரோடு, முத்துசாமி திருமண மண்டபம், மதுக்கரை ரோடு, சுந்தராபுரத்திலுள்ள தனியார் திருமண மண்டபம், ஈச்சனாரி விநாயகர் கோவில் அருகிலுள்ள தனியார் திருமண மண்டபம், காளப்பட்டி தனியார் கலையரங்கத்தில் அமைந்துள்ள கோவிட் கேர் சென்டர் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மையங்களை நேரில் ஆய்வு செய்தார்.

மேலும் அம்மையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள சுகாதார வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, மின் வசதி, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் மற்றும் மருத்துவ வசதி குறித்தும், நோயாளிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள படுக்கை வசதி குறித்தும் கேட்டு அறிந்துகொண்டார்.

இவ்வாய்வின்போது மண்டல உதவி ஆணையர்கள் மகேஷ்கனகராஜ்(மத்தியம்), ரவி(தெற்கு), நகர்நல அலுவலர் ராஜா, மண்டல சுகாதார அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், லோகநாதன், சந்திரன், உதவி செயற்பொறியாளர் சுந்தர்ராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.