உரிய நேரத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததே டெங்கு பரவுவதற்கு காரணம் : ஸ்டாலின்

திமுக செயல் தலைவர் ஸ்டாலின், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்தார். அங்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்த ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், தமிழகத்தில் டெங்கு வேகமாக பரவி வருகிறது. ஆனால் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தவறான தகவல்களை தந்து கொண்டு இருக்கிறார். குதிரை பேர ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் முதல்வர் பழனிசாமியும் இதனை கண்டு கொள்ளவில்லை.

தமிழகத்தில் 7000 பேருக்கு டெங்கு பாதிப்பு உள்ளது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 25 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை. படுக்கை வசதிகளும் செய்து தரப்படவில்லை. ஆனால் இதனை சரி செய்ய வேண்டிய அமைச்சர்கள் எந்த துறையில் எப்படி லஞ்சம் வாங்கலாம் என பார்த்துக் கொண்டுள்ளனர். ஒருவேளை டெங்குவை பரப்பும் கொசுவிடமும் ஏதாவது வாங்கலாமா என பார்த்துக் கொண்டிருக்கிறார்களா என தெரியவில்லை.
ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரித்தால் மட்டுமே சரியாக இருக்கும். அப்போது தான் உண்மை வெளி வரும். அமைச்சர்கள், அதிகாரிகள், மத்திய அமைச்சர்கள், டில்லி டாக்டர்கள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் என அனைவரும் விசாரிக்கப்பட வேண்டும்.

உரிய நேரத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததே டெங்கு பரவுவதற்கு காரணம். உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டிருந்தால் சுகாதாரப் பணிகள் முறையாக நடந்திருக்கும். இவ்வாறு ஸ்டாலின் பேசி உள்ளார்.