தமிழ் மறவாதிருக்க தமிழை உச்சரிப்போம்

தமிழ் மொழி போல் இனிது எங்கும் இல்லை என்பது மறுக்கமுடியாத உண்மை. அண்மையில் தமிழ் மொழி கொண்டு உருவான அனல் பறக்கும் செய்தியாக இருந்தது ஆங்கில வடிவில் உள்ள ஊர் பெயர்களை தமிழ் வடிவிலேயே மாற்றபட்டது தான்.

இதில் பலரும் இந்த நிலையில் இது தேவையா, மாற்றப்பட்டது சரி தான், பல விதமான கருத்துகளை முன்வைத்தனர். இந்த பெயர்கள் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டவை அல்ல. அவர்களால் உச்சரிக்கப்பட முடியாத தமிழ் ஊர்ப் பெயர்களை அவர்களுக்கு ஏற்றவாறு மாற்றிகொண்டனர். இதனை மீண்டும் தமிழ் உச்சரிப்பில் மாற்றுவதற்கு, ஆங்கிலேயர்கள் நம் நாட்டை விட்டுப் போயும் 73 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன.

தமிழ்நாட்டில் உள்ள 1,081 ஊர்ப்பெயர்களை அவற்றின் தமிழ்ப் பெயர்களுக்கேற்ப ஆங்கில உச்சரிப்பில் மாற்றுவதற்கான ஆணையை அரசு இதழில் வெளியிட்டுள்ளது தமிழக அரசு. ஆங்கிலேயர்களால் உச்சரிக்கப்பட முடியாத தமிழ் ஊர்ப் பெயர்களை, அவர்களால் இயன்றவாறு உச்சரித்ததை, மீண்டும் தமிழ் உச்சரிப்பில் மாற்றுவதற்கு, ஆங்கிலேயர்கள் போய் 73 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன.

தமிழ் உச்சரிப்பு போலவே, ஆங்கில எழுத்துக்களில் ஊர்ப் பெயர்களில் திருத்தம் செய்யப்போவதாக, கடந்த 2018 -19-ம் ஆண்டு தமிழ் மற்றும் செய்தித்துறை மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்டதை தற்போது அரசிதழில் ஆணையாக வெளியிட்டு, பெயர் திருத்தங்களை உறுதி செய்துள்ளது தமிழக அரசு.

இப்படி மாற்றபட்ட பெயரும் தெரியும், மாறிய பெயரும் தெரியும்.இதற்கு முன் இருந்த அந்த ஊர்களின் பெயர் தெரியுமா?. ‘பூ இருந்த அல்லி’ என்பதே பூவிருந்தவல்லியாகி ஆங்கிலேயர் உச்சரிப்பில் பூனமல்லி ஆகியது. ஒத்தைக்கல் மந்து என்பதே ஆங்கிலேயர்கள் உச்சரிப்பில் ‘ஊட்டக்காமண்ட்’ என்றாகிப் பின்னர் ஊட்டி ஆகியது. மந்து என்றால் தோடர் மொழியில் குடியிருப்பு என்று பொருள். தூத்துக்குடி, டியூட்டிக்கோரின் ஆகி கோவன்புதூர், கோயம்பட்டூர் ஆகியது. மறைக்காடு எனும் அழகிய தமிழ்ப் பெயரை வேதா (மறை) ரண்யம் (ஆரண்யம் – காடு) என மாற்றினார்கள்.

தமிழில் ‘திரு’ அழகிய மதிப்பு மிக்க சொல் அதனை முன்கொண்டு ஆயிரக்கணக்கான ஊர்கள் உள்ளது. திருவாரூர், திருமகள், திருநெல்வேலி, திருவள்ளுவர், திருமூலர், கேரளாவில் உள்ள திரு அனந்தபுரம் (திருவனந்தபுரம்) தொடங்கி ஆந்திரா திருத்தணி(கை), திருப்பதி, திருமலை, திருச்சானூர் ஆகியவையும் தமிழ்ப் பெயர்கள்தாம்.

ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் தமிழ்ப் பெயர்கள் சமஸ்கிருதம் மற்றும் ஆங்கிலேயர் சொல்லாற்றலுக்கு ஏற்ப மாறிப் போய், திருவரங்கம், ஸ்ரீரங்கம் ஆக மாறியது, திருவில்லிப்புதூர், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆனது. திரு என்பதற்கு மாற்று வடமொழிச் சொல்லாக ஸ்ரீ என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. ஸ்ரீ என்பது தமிழ் அல்ல.

தமிழை வளர்க்க வேண்டும் என்ற நிலை மறைந்து, தமிழை மறக்காமல் இருக்க வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது. தமிழ் நாட்டில் தமிழ் மறக்காமல் இருக்க தமிழை உச்சரிப்போம். தமிழை நினைவுபடுத்த தமிழக அரசு தற்பொழுது இந்த முடிவை எடுத்து செய்தது பாராட்ட கூடிய செயல் தான்.