விளையாடினாலும் விலகியிருப்போம்

மற்ற விடுமுறை நாட்கள் போன்று தற்போது நாம் கடந்து கொண்டிருக்கும் இந்த ஊரடங்கு காலமும் மாறிவிட்டது. காலையில் மளிகை கடைகளில் வரிசை, அதன் பின் மருந்து கடைகளுக்கு பாதயாத்திரை, மதியம் சின்ன உறக்கம், மாலையில் தெரு ஓரங்களில் விளையாட்டு என நோய் தொற்று பரவலை தடுக்க விடப்பட்ட விடுமுறை பலருக்கு சாதகமாக மாறிவிட்டது.

முக்கிய சாலைகளில் ரோந்து வரும் காவல் துறையினர் தெருக்களுக்குள் வருவதில்லை. காரணம் சாலைகளில் வலம் வருபவர்களையெல்லாம் கண்காணிப்பதிலே நேரம் சரியாக உள்ளது. அந்த அளவிற்கு மக்களும் பொறுப்பின்றி இருக்கின்றனர்.
நீண்ட நேரம் வீட்டின் உள்ளேயே இருக்கவும் முடியாது. அதனால் சிலர் வீட்டின் வாசலில் அமர்ந்து அக்கம் பக்கத்தினருடன் கொரோனாவுடன் கலந்த சொந்த பட்டிமன்றமும் நடைபெறுகிறது. இது பெண்களுக்கு என்றால், ஆண்கள் சீட்டு விளையாடுவது, கேரம் போர்ட், பட்டம் போன்ற விளையாட்டுக்களும், குழந்தைகள் அதையும் தாண்டி தெரு கிரிக்கெட், கண்ணாமூச்சி, பாண்டி, பாட்டுக்கு பாட்டு போன்ற அவர்களுக்கு ஏற்ற விளையாட்டுகளும் சின்ன சின்ன சத்தங்களுடன் நடைபெற்று வருகின்றன. இதில் ஒன்றும் தவறு இல்லை. ஆனால், அதில் சமூக இடைவெளியை பின்பற்றினால் அனைவருக்கும் நல்லது.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கொரோனா பாதித்த நபர் நண்பர்களுடன் சீட்டு விளையாடியதால் 24 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நமக்கு வெறும் செய்தி தான். ஆனால், இந்த நிலை நமக்கும் வராது என்பதில் என்ன நிச்சியம். அரங்கம் என்ன செய்தாலும் நாம் தான் அதற்கு முழு பொறுப்பாளர்.
அரசின் உத்தரவின் பேரில் விழித்திருப்போம், வீட்டிலிருப்போம், விலகியிருப்போம்.