கோவையிலுள்ள நண்பரை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி

கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்தவர் 80 வயதான வாசுதேவன். இவர் அசோக் லேலாண்ட் நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பு வகித்து, ஓய்வு பெற்றவர்.

1958-லிருந்து தற்போது வரை பா.ஜ.க. வின் கட்சி உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.
இவருக்கு கடந்த ஞாயிறு வாழ்வில் மறக்கமுடியாத நாள்தான்.

அன்றுகாலையில் அவருக்கு தொலைபேசியில் ஒரு செய்தி வந்தது. அதில், “பிரதமர் இன்னும் சில நொடிகளில் உங்களிடம் பேசுவார், தயாராக இருங்கள்” என்று ஒரு குரல் சொல்ல, பிரமிப்படைந்தார் வாசுதேவன்.
“வணக்கம்” என்று தமிழில் பிரதமரின் குரல் கேட்டதும் மகிழ்ச்சியில் உறைந்த அவர் “நமஸ்தே ஜி” என்று பதிலளித்தார். வாசுதேவனிடம் நலம் விசாரித்த பின்னர் பிரதமர் “ஞாபகம் இருக்கிறதா, 1980 ஆம் ஆண்டு நாம் இருவரும் ஒன்றாய் டெல்லி நோக்கி ரயிலில் பயணம் செய்தோமே” என் மோடி அவர்கள் கூறினார்.
“ஆமாம். ஞாபகம் உள்ளது. நாம் இருவரும் ரயிலில் டெல்லியில் அப்போது நடைபெறவிருந்த தேசிய மாநாட்டிற்கு சென்று கொண்டிருந்தோம். அன்று நாம் இருவரும் நிறைய பேசினோம்” என்றார்.
“நீங்கள் கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர்” என்று பிரதமர் ஹிந்தியில் சொல்லியபோது “ஆமாம் ஐயா, நான் 1958-லிருந்து உறுப்பினராக உள்ளேன்” என்றார்.
வாசுதேவனிடம் நலம் விசாரித்துவிட்டு “இந்த கொரோனா சீற்றத்தை சரி செய்த பின்னர் உங்களிடம் நான் மீண்டும் பேசுகிறேன்” என்று கூறி தன் வாழ்த்துக்களை அளித்தார் பிரதமர்.
இதைப்பற்றி மேலும் அறிய வாசுதேவனைத் தொடர்புகொண்டபோது அவர் நம்மிடம் கூறியதாவது: “பா.ஜ.க. வின் குஜராத் அமைப்பு செயலர் என் நண்பர். அவர் மூலமாய் எனக்கு மோடி ஜி யை 1980 அன்று தெரியவந்தது. மோடி அவர்கள் அதன் பின் பா.ஜ.க. வின் குஜராத் அமைப்பு செயலராகப் பொறுப்பேற்றார்.
அந்தாண்டு டெல்லியில் கட்சியின் தேசிய மாநாடு நடைபெறவிருந்தது. நான் தேசியக் குழு உறுப்பினர்களில் ஒருவராக அதில் கலந்துகொள்ள ரயிலில் சென்றேன். ரயில்பெட்டியில் எனக்கொரு ஆச்சரியம். என்னுடன் மோடி அவர்கள் பயணம் செய்தார். நானும் மோடி அவர்களும் எதிர் எதிர் சீட்டில் இருந்தபடி பேசிக்கொண்டு பயணித்தோம்.
என்னிடம் “தமிழ்நாட்டைப் பற்றியும் தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் – தி.க., தி.மு.க., அ.தி.மு.க எவ்வாறு தோன்றியது என்று கேட்டபடி பயணம் செய்தார்” எனத் தன்னிடம் பாரதப் பிரதமர் தொலைபேசியில் பேசியது, நலம் விசாரித்தது முற்றிலும் மறக்க முடியாத ஒரு நிகழ்வு எனக் கூறினார் வாசுதேவன்.