கைகளை கழுவ சோப்புடன் வீட்டு முன்பாக வாஷ் பேசின் உருவாக்கிய அ.தி.மு.க. உறுப்பினர்

கொரோனா விழிப்புணர்வு குறித்து கைகளை கழுவ சோப்புடன் வீட்டு முன்பாக வாஷ் பேசின் உருவாக்கிய அ.தி.மு.க.பெண் உறுப்பினர்.

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுபடுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வைரஸ் பரவாமல் தடுக்க கைகளை சுத்தமாக சோப்பு போட்டு கழுவ சுகாதார துறை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் கோவை கவுண்டம்பாளையம் பழைய ஆறாவது வார்டு நடராஜ் நகர் பகுதியில் வசித்து வரும் சோனாலி பிரதீப் என்பவர் தனது வீட்டின் முன்பாக வாஷ் பேசின் அமைத்து அதில் சோப்பு மற்றும் திரவங்களை வைத்து வீதிக்குள் செல்லும் அனைத்து பொது மக்களும் கைகளை சுத்தமாக கழுவ விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அ.தி.மு.க.உறுப்பினரான சோனாலி பிரதீப் தனது பகுதியில் வசிக்கும் ஏழை குடும்பங்களுக்கு மளிகை சாமான்கள் மற்றும் மக்களுக்கு இலவச முக கவசங்களை வழங்கி வருகிறார்.

இது குறித்து அவர் பேசுகையில், தமிழக அரசுடன் அனைத்து பொதுமக்களும் இந்த அவசர கால நேரத்தில் உதவும் படி இந்த பணிகளை செய்து வருவதாகவும், இந்த நோய் நம்மை தாக்காமல் இருக்க, அடிக்கடி கைகளை சோப்பு போட்டு நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும். ஒவ்வொரு முறையும் கை கழுவ குறைந்தபட்சம் 30 விநாடிகள் எடுத்துக்கொள்ள வேண்டும். இருமும் போதும் தும்மும்போதும் முகத்தை கைக்குட்டை கொண்டு மூடிக்கொள்ள வேண்டும், குறிப்பாக வீட்டை விட்டு வெளியேறாமல் அரசின் ஊரடங்கு உத்தரவை மதித்து நடக்க வேண்டும் என இந்த பகுதிகளில் பொது மக்களுக்கு வலியுறுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.