அதிரடி தெலுங்கு மசாலா..

பொதுவாக, மசாலா சினிமாக்களுக் கென்று எப்போதும் தனி இரசிகர் கூட்டம் உலகெங்கும் இருக்கின்றது. விமர்சகர்கள் சிலரும் கலை இரசிகர்களும் இதுபோன்ற படங்களை கேலி, கிண்டல் செய்வதுண்டு. ஆனாலும், வெகுஜன இரசிகர்களை மயக்கும் மசாலா படங்களை மிகவும் குறைவாக எடை போட்டு விட முடியாது. இப்படங்களை எடுப்பதற்கும் ஒரு தனித்திறமை வேண்டும்.

இந்தியத் திரையுலகில் மசாலாப் படங்களுக்கென்று சிறப்பு பெற்றது தெலுங்கு சினிமா. அங்கு மசாலா படங்களுக்கான திரைக்கதையை மிக அழகாக கையாண்டு வருபவர் இயக்குநர் போயா பட்டீ சீனு. இவர் எடுத்த துளசி, தம்மு, லெஜெண்ட் உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி கண்டுள்ளன. சமீபத்தில் இவரது கதை, திரைக்கதை, இயக்கத்தில் வெளியான அதிரடி மசாலாப் படம் தான் ‘ஜெயா ஜானகி நாயக்க’. கதைப்படி, மிகப்பெரிய கோடீஸ் வரரான சரத்குமாருக்கு இரண்டு மகன்கள். இளைய மகன் தான் படத்தின் கதாநாயகன் ஸ்ரீனிவாஸ். இவரது கண்முன் ஏதாவது தப்பு நடந்தால் அடித்து துவம்சம் செய்து விடுவார்கள். இவரது குணம் கண்டு கதாநாயகிக்கு (ராகுல் ப்ரீதிசிங்) காதல் வருகிறது. இந்த காதல், கல்யாணத்தில் முடியும் என்று நினைக்கும்போது நாயகியின் அப்பா இவர்களது காதலை எதிர்க்கிறார். இதையடுத்து மன வருத்தத்துடன் ஸ்ரீனிவாஸ் தன் காதலியைப் பிரிந்து செல்கிறார்.

இந்நிலையில், அதே ஊரில் மல்ட்டி மில்லியனராக இருக்கும் ஜெகபதிபாபு மகனுக்கும் ராகுல் பிரீத்தி சிங்க்கும் கல்யாணம் நடக்கின்றது. அதற்கு பிறகு தொழில் போட்டி காரணமாக சிலர் ஜெகபதிபாபு குடும்பத்தை அளிக்க முயற்சி செய்கிறார்கள். அதில் முதல் கட்டமாக ராகுல் ப்ரீத்தி சிங் கணவரை சுட்டுக்கொன்று விடுகிறார்கள். அதன் பின் ஸ்ரீனிவாஸ், ராகுல் ப்ரீத்தி சிங்கையும், அந்த குடும்பத்தையும் எப்படி காப்பற்றுகிறார் என்பது தான் மீதிக்கதை.

ஒரு மசாலா கதைக்குள் குடும்பம், காதல், விரோதம் என்று திரைக்கதையை அருமையாக கையாண்டு இருப்பது படத்தின் வெற்றிக்கு முதல்படி. இசை தேவி ஸ்ரீ பிரசாத். தமிழ் படங்களுக்கான மெட்டுகளை விட, தெலுங்கில் இவரது இசைத் திறமை அதிரடியாக அசத்துகிறது. ஒட்டு மொத்தத்தில் ‘ஜெயா ஜானகி நாயக்க’ கமர்சியல் மாஸ் ஹிட் அடித்துள்ளது.

பாண்டியராஜ்