A சான்றிதழ் தேவை இல்லை

நம்மைச்சுற்றி பல விஷயங்கள் நடந்து கொண்டு இருக்கின்றது என்பதை நம்மால் உணர முடியாத அளவுக்கு நம் தலையில் 1008 வேலை கொட்டிக்கிடக்கின்றது. அதிலும் இளம் தலைமுறையினருக்கு கற்பனைக்கு எட்டாத பிரச்னைகள் உள்ளன. குழப்பமான வாழ்க்கை, படுதோல்விகளை தலையில் சுமந்து கொண்டு இருக்கும் அவர்களின் பிரச்னைக்கு நடுவில் நம் நாட்டில் உள்ள பல பிரச்னைகள் வேறு!

இப்படியொரு வாழ்வியலை மிக அழகாக, அதேநேரம் கொஞ்சம் குழப்பத்துடன் உணர்த்தியிருக்கிற படம்தான் இயக்குநர் ராமின் ‘தரமணி’.

மி ஜி துறையில் வேலை பார்க்கும் பெண்மணி, மழைக்கு ஒதுங்கும்பொழுது ஒரு அழுக்கு வாலிபனை சந்திக்கும் சூழல் ஏற்படுகிறது. அப்பொழுது அந்த வாலிபன் தன் காதல் தோல்வியை அந்த பெண்ணிடம் பகிர்ந்து கொள்கிறான். போகப்போக அந்த பெண்ணுக்கு அந்த வாலிபன்மேல் ஒரு ஈர்ப்பு வர ஆரம்பிக்கிறது. இவர்கள்தான் இப்படத்தின் கதாநாயகன், கதாநாயகி.

அந்த பெண் ஆல்தியா, அந்த வாலிபன் பிரபுநாத். ஆல்தியாக்கு ஏற்கெனவே கல்யாணமாகி ஒரு பையன் இருக்கிறான் என்ற விஷயம் பிரபுநாத்துக்கு தெரிய வருகிறது. அவள் வாழ்க்கையில் ஏற்பட்ட சில சோகமான சம்பவங்களை பிரபுநாத்திடம் கூறுகிறாள். அதற்கு பிறகு பிரபுநாத் அவளிடம் காதல் வயப்படுகிறான். இவ்வாறு நகர்ந்து கொண்டிருக்கும் திரைக்கதையின் நடுவே இயக்குநர் ராம், சில சமூக அவலங்களையும் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். அதை நீங்கள் படம் பார்க்கும்போது உணர்வீர்கள். நீங்கள் சந்தித்த பிரச்னை வரும்போது கைதட்டி விசில் அடிக்கவும் மனம்வரும்.

திடீரென கதாநாயகனுக்கு அந்த பெண் மேல் சந்தேகம் ஏற்படுகிறது. அந்த பிரச்னை பெரிதாகி இரண்டு பேரும் பிரியும் சூழல் ஏற்படுகிறது. அதற்கு பிறகு பிரபுநாத் மற்றும் ஆஸ்தியா என்ன என்ன பிரச்னைகளை சந்திக்கிறார்கள். கடைசியில் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பது மீதி’கதை. யுவன்சங்கர்ராஜா இசை மனதில் நிற்கிறது. ஒளிப்பதிவு தேனீ ஈஸ்வர், நம் கண்ணுக்குள் தரமணியின் அழகை மிக ஆழமாக பதிவு செய்கிறார்.

மொத்தத்தில் தரமணி பார்க்க வேண்டிய படம். இதற்கு A சான்றிதழ் தேவை இல்லை. ஆனால் சென்சார் போர்டு சான்றிதழ் கொடுத்ததற்கு பல விதிமுறைகள் இருக்கலாம் என்பதால் அதனையும் நாம் மதிக்கத்தான் வேண்டும்.

பாண்டியராஜ்