வேகம், விவேகம் இரண்டும் குறையக்கூடாது

பெண் சமுதாயம் வெற்றி பெற வேண்டும் என்று பலர் கூறி வருகிறார்கள். ஆனால் அதற்கான முன் முயற்சிகளை யாரும் எடுப்பதில்லை. பெண்களுக்கு சிறப்பு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பது சிலரின் கருத்து. ‘‘பெண்கள் வெற்றி பெறுவதற்கு ஆணின் பக்கபலம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மன தைரியம் மற்றும் திறமை இருந்தால் போதும்’’என்று கூறுகிறார் ஒரு பெண்மணி.

பொதுவாக, சினிமா பிடிக்காத நபர்கள் யாரும் இருக்க மாட்டர்கள். இந்நிலையில் தனிப்பட்ட முறையில் ஒரு பெண் சினிமா உலகில் வெற்றி அடைய முடியுமா என்று பலர் சிந்திப்பார்கள். ஆனால் ‘என்னால் வெற்றி பெற முடியும்’ என்று மிக தன்னம்பிக்கையுடன் கூறும் ஆடை வடிவமைப்பாளர் ‘கலை’, தன் வாழ்க்கையில் நடந்த ஏற்றத்தாழ்வுகளை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

சினிமாவில் நமக்கென்று தனி இடம் இருக்கிறதா என என் மனதில் ஆழமாக ஒரு யோசனை ரொம்ப நாளாகவே இருந்தது. கடின உழைப்பின் மீது எனக்கு மிகவும் நம்பிக்கை உண்டு.

சிறு வயதில் இருந்தே எந்த ஒரு விஷயம் பண்ணாலும் பிடிச்சு பண்ணுவேன். அதற்கு காரணம், எனது அம்மா. அவங்க எப்போதும் என்னிடம், ‘உனக்கு எந்த ஒரு செயல் பிடிக்குதோ, அதை சீக்கிரம் செஞ்சு முடித்து விட வேண்டும். அதே சமயம் யார் மனதும் புண்படாத அளவுக்கு அச்செயல் இருக்க வேண்டும்’ என்று சொல்லுவாங்க. அது என் மனசுல ரொம்ப ஆழமாக பதிந்து விட்டது.

என் பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, அடுத்து  என்ன பண்ணலாம்னு பல யோசனை. அப்போது, விதவிதமான ஆடைகளைக் காணும் போது எனக்கு எப்போவும் ஒரு தனி ஈர்ப்பு இருந்ததை உணர்ந்தேன். உடனே கோவையில் உள்ள ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் பி.எஸ்சி. ஆடை வடிவைப்புத் துறையில் சேர்ந்து படிக்கத் தொடங்கினேன். அந்த தருணங்களில்தான் எனது திறமை, ஆர்வம் எந்த அளவில் சிறப்பாக இருக்கிறது என்பதை உணர முடிந்தது. எனக்கு பெரிய அளவிலான நண்பர்கள், தோழிகள் கூட்டம் கிடையாது. என் அருகில் எனக்கு பிடித்த சில தோழிகள் எப்போதும் இருப்பார்கள்.

ஒரு நாள் என் உயிர்த் தோழி மோனிகா, ‘கலை நீ ஏன் தமிழ் சினிமா நட்சத்திரங்களுக்கு ஆடை வடிவமைப்பாளர் ஆக கூடாது என்று என்னிடம் கேட்டாள். அப்போது என் உள் மனது, ‘இதுதான் உன் வாழ்க்கைப் பயணம். அதை நோக்கி பயணம் செய்’ என்று சொல்லியது. இருப்பினும், அதை நடைமுறைப்படுத்த மன தைரியம் இல்லை. ஒரு பெண்ணாக நான் எப்படி சினிமா உலகில் நின்று சாதிக்க முடியும் என்று பயம் வந்தது. அதே வேளையில், எங்கள் கல்லூரி நிர்வாக இயக்குநர்கள் சரஸ்வதி மற்றும் பிரியா ஆகியோரைப் பார்க்கும் போது பெண்கள் சமுதாயம் எவ்வாறு தைரியமாக இருக்க வேண்டும் என்பதற்கான தன்னம்பிக்கைவரத் தொடங்கியது. பெண்கள் சமுதாயம் வெற்றி பெற வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் பெண்கள் தோற்க’கூடாது என்ற எண்ணம் அவர்களிடம் உள்ளது.

அவர்களின் மன தைரியம் என்னை இன்னும் அதிகமான தன்னம்பிக்கையின் உச்சத்துக்கு  கொண்டு போனது. அதையடுத்து சென்னைக்கு வந்து பல நிறுவனங்களுக்கு ஏறி இறங்கினேன். யாரும் என் திறமையைப் புரிந்து கொள்ள வில்லை. பலதடவை அவமானம் ஏற்பட்டது. அப்போதெல்லாம் ஜெயிக்கணும் என்ற எண்ணம் மட்டும் மனதில் ஒளிந்து கொண்டு இருந்தது.

காலங்கள் கடந்து செல்ல செல்ல ஒவ்வொரு கதவாகத் திறக்க ஆரம்பித்தது. பலர் என் திறமையைப் புரிந்து கொண்டு வாய்ப்புத்தர தொடங்கினர். அப்பொழுதுதான் இயக்குநர் பா.ரஞ்சித் அவர்களை சந்திக்கும் சூழல் ஏற்பட்டது. என் திறமையின் மீது நம்பிக்கை வைத்து அவர் தனது ‘மெட்ராஸ்’ படத்தில் எனக்கு வாய்ப்பு அளித்தார். அதற்கு பிறகு ‘காதலும் கடந்து போகும்’, ‘ஒத்தைக்கு ஒத்தை’ என்று சில படங்கள் செய்தேன். மேலும், கணபதி சில்க், சென்னை சில்க், ட்வின் பேர்ட்ஸ், எஸ்பிபி சில்க் என்று இதுவரை 85 விளம்பரப் படங்களிலும் பணியாற்றி உள்ளேன்.

எனது வெற்றிக்கான இலக்கை இன்னமும் எட்டவில்லை. அதற்கு குதிரையை விட வேகமாக ஓடிக்கொண்டு இருக்கிறேன். சினிமா உலகில் கஷ்டம், சோகம், துக்கம் எல்லாம் இருக்கலாம். அதை எப்படி நமது வெற்றிக்கு வழியாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.

ஹிட்லர், ‘வெற்றியைத் தொடும் வரைக்கும் உன் வேகம் மற்றும் விவேகம் குறையக்கூடாது’என்று சொல்வார்.

அந்த வார்த்தைகளை உள் வாங்கி ஒவ்வொரு பெண்ணும் வெற்றியை நோக்கி வீர நடை போட வேண்டும் என்பது எனது ஆசை. வரும் காலங்களில் நல்லதே நடக்கும் என்று மனதில் வைத்துக் கொண்டு பயணிப்போம். திறமை, உழைப்பு இரண்டும் உங்கள் வாழ்கையில் வெற்றி, சந்தோசம் ஆகியவற்றைத் தேடிக் கொடுக்கும்.

பாண்டியராஜ்