தன்னலமற்றவர்கள் சிவனடியார்கள்

– ‘’எப்போ வருவாரோ’’ நிகழ்ச்சியில் மரபின்மைந்தன் முத்தையா

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸின் ‘’எப்போ வருவாரோ’’ நிகழ்ச்சியின் பத்தாவது நாள் மற்றும் இறுதிநாளன்று எழுத்தாளர், சொற்பொழிவாளர் மரபின்மைந்தன் முத்தையா ‘சேக்கிழார்’ குறித்து சொற்பொழிவாற்றினார்.

இவர் உரையாற்றுகையில், எந்தப் பயனும் கருதாது தொண்டு செய்பவர்கள் தான் அடியார்கள், அவர்களை திருத்தொண்டர்கள் என அழைக்கிழார் சேக்கிழார். இந்த தேசம் பெரிய தலைவர்களை தேடிக்கொண்டு இருக்கிறது. ஆனால் தன்னலமற்ற தொண்டு செய்யும் தொண்டனே தலைவர்களைவிட நம் தேசத்துக்கு தேவைப்படுகிறார்கள். தொண்டர்களின் சொத்து என்பது அவர்கள் அணிந்திருக்கும் ருத்ராட்சமும், கந்தலாடையும் தான். தொண்டர்களுக்கு அனைத்துமே சிவனின் பிரசாதமே. நல்லது கெட்டது கிடையாது, அவர்களுக்கு தங்கமும், ஓடு என இரண்டுமே ஒன்று, அவர்களின் நோக்கம் இறைவனை வணங்குவது மட்டுமே என்று தொண்டர்கள் குறித்து சேக்கிழார் குறிப்பிடுகிறார்.

தமிழகத்தின் பண்டைய கால பண்பாடு, வாழ்க்கை முறை, இசை, பக்தி ஆகியவற்றை தெளிவாக பதிவு செய்த நூல் சேக்கிழார் இயற்றிய திருத்தொண்டர் புராணம். திருவெண்காட்டு நங்கையும், அவரது கணவரும் தினமும் சிவனடியார்களுக்கு உணவு படைத்த பின்பே உணவுன்பார்கள். ஒரு நாள் சிவனே அடியாராக அவரது இல்லத்துக்கு வந்தார். உணவுண்ண அழைத்தனர், ஆனால், அவர் நான் ஆறு மாதத்துக்கு ஒரு முறை ஐந்து வயதுடைய பிள்ளைக் கறி உண்பதே வழக்கம் என்கிறார். அதுவும் யார் உணவுண்ண அழைக்கிறாரோ அவரின் பிள்ளையை இன்முகத்துடன் படைக்கச் சொல்கிறார். திருவெண்காட்டு நங்கையும், அவரது கணவரும் பள்ளிக்குச் சென்றிருந்த பிள்ளையை அழைத்து வந்து அந்தப் பிள்ளையை குளிப்பாட்டி  அறுத்து சமைத்து அவருக்கு படைத்தனர் என்கிறார் சேக்கிழார். இதில் அவர் குறிப்பிடுவது குடும்பத்தலைவருக்கு ஒரு குறிக்கோள் இருக்குமென்றால் அந்தக் குறிக்கோளுக்கு குடும்பத்து உறுப்பினர்கள் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும். அது போல் நமது பெரியவர்கள் ஒரு தர்மக் காரியத்தை பின்பற்றினால் அது பல தலைமுறைகளைத் தாண்டி வரவேண்டும் என்று உணர்த்துகிறார் சேக்கிழார்.

மனுநீதிச் சோழன் கதைகளில் பசு வாயினால் மணியை அடித்தது என்று படங்களை பார்த்திருப்போம். ஆனால், சேக்கிழார் பசு தன் வாலினால் மணியை அடித்தது என்று பெரிய புராணத்தில் சொல்கிறார். பெரியபுராணம் அதிசியங்களும், அற்புதங்களும் நிறைந்த பெட்டகம். கோல்களின் ஆட்சியாலேயே இந்த உலகம் சுழல்கிறது. அந்தக் கோல்களை சுழல வைப்பவர் இறைவனே. இறைவன் நினைத்தால் மட்டுமே கோல்களை நிர்மாணிக்க முடியும். இறை வழிபாட்டால், பிராத்தனைகளால் மட்டுமே நமது பிரச்சனைகள் தீரும் என்பது கோல்களினால் இல்லை என்று வழியுறுத்துகிறது பெரியபுராணம்.

அடியார்களிடத்தில் எந்த வேற்றுமையும் இருந்ததில்லை. சாதி பேதங்களும் இல்லை என்பது பெரியபுராணத்தில் தெளிவுபடுத்துகிறார் சேக்கிழார். அமைதியான அன்பு, முரட்டுத் தனமான அன்பு என இரண்டுவிதமாக சிவனிடம் அன்பு செலுத்தியுள்ளனர் சிவனடியார்கள். சாக்கிய நாயனார் என்பவர் ஒரு பெளத்தர். அவர் ஒரு நாள் கல்லைக் கண்டு சிவனை கல்லால் அடித்தார். கல்லால் அடித்துக் கொண்டே இருந்தார். அதே போல் கண்ணப்ப நாயனார் வாயில் தண்ணீரை எடுத்து வந்து சிவனுக்கு அபிஷேகம் செய்தார். பன்றிகறி சமைத்து, சுவை சரியாக உள்ளதா என்று பார்த்த பின் சிவனுக்குப் படைப்பார். ஆகவே அன்பு எவ்வகையிலேனும் அது அன்பாகவே ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்கிறார் சேக்கிழார்.

இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணன் உள்ளிட்ட 2000 க்கும் ம் மேற்பட்ட பலர் பங்கேற்றனர்.

வருடந்தோறும் ‘எப்போ வருவரோ’ நிகழ்ச்சியின் சொற்பொழிவுகளை ஒலிநாடாவாக விற்கப்படும். இதில் பெறப்படும் தொகை சமூகத்தில் அறப்பணிகளை செய்து வரும் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிகழ்வில் ஆதரவற்றவர்களுக்கு வாழ்வளித்து வரும் கோவை ஈரநெஞ்சம் அறக்கட்டளை மற்றும் பழங்குடியின பெண்குழந்தைகளுக்கு கல்வியை வழங்கிவரும் ஆனைகட்டியைச் சேர்ந்த டிங்கிள் அமைப்பு உள்ளிட்ட அமைப்புகளுக்கு ஒலிநாடாக்கள் மூலமாக கிடைத்த நிதி இந்த வருடம் வழங்கப்பட்டது.