நம் வாழ்க்கைக்கு நாமே பொறுப்பு

பிரச்னைகள் இல்லாத வாழ்க்கை யாருக்கும் இல்லை. ஆனால் அந்த பிரச்னைகளை எப்படி ஒருவர் கையாள்கிறார் என்பதைப் பொறுத்து அந்த நபரின் எதிர்காலம் அமையும். தன்னைப் பற்றி உலகம் என்ன நினைக்கிறது என நினைப்பவர் இந்த உலகில் நிம்மதியாய் இருந்துவிடப் போவதில்லை. ஆண், பெண் எனும் பாலினம் அறிந்து பழகுவது உலக இயல்பு. ஆனால் நமது நாட்டைப் பொறுத்தவரை அனைவரும் ஆத்மாவாகவே பார்க்கப்பட்டனர். ஆன்மிக பூமியில் அனைவரும் மகாத்மாக்களே.

அதை அறிந்துகொண்டவர், புரிந்துகொண்டு தெளிந்தவர் வாழ்வில் உயர்நிலை அடைகிறார். பொதுவாக, வாழ்வில் ஏற்படும் பிரச்னை எனும் சூறாவளியால் சூழப்பட்டவர்கள் பெரும்பாலும் அதிலிருந்து மீள்வதில்லை. அப்படி மீண்டெழுந்தவர் திரும்பவும் வாழ்வில் உயர்ந்தெழ மாட்டார்கள். மேலும், வாழ்க்கைப் பிரச்னைகளில் இருந்து தப்பிக்க வேறு வழியின்றி, இறைவனே சரணாகதி என்று ஆன்மிகப் பாதையில் சிலர் சென்றுவிடுவர். அப்படி சென்றவர்களில் திரும்பவும் நடைமுறை வாழ்க்கைக்குத் திரும்ப மாட்டார்கள். அப்படியும் திரும்பி வந்தவர்கள் இல்லற வாழ்விலோ, தொழிலோ ஜொலித்ததில்லை. அப்படியே இதிலெல்லாம் பிரகாசமாய் ஜொலித்திட்டாலும் பதவி, புகழ், பணம் எனப் பெற்ற பின்னர் மக்களுக்கு உதவும் மனப்பான்மையுடன் இருப்பவரைக் காண்பது அரிதிலும் அரிது.

அதற்காக, அரிதான காரியங்கள் உலகில் நடைபெறாமலே போய்விடுமா என்றால் அப்படியும் இல்லை. அந்த அரிதான காரியங்களை சில மகாத்மாக்கள் உலகின் எங்கோ ஓர் மூலையில் தங்கள் பணியைத் திறம்பட செய்துகொண்டு, எளிமையாய் தங்கள் வாழ்க்கைப் பயணத்தை நடத்திக் கொண்டிருப்பர். அப்படிப்பட்ட மனிதர்களில் ஒருவர்தான், அன்பு நண்பர் அண்ணாமலை எஸ்.ஈஸ்வரன். இவரது ஆன்மிக நாட்டத்தையும் அருட்பேராற்றலையும் கண்டு இவருக்கு அருள்நிதி என்று பட்டமளித்து இந்த சமூகம் கௌரவித்துள்ளது.

‘நல்லாரைக் காண்பதும் நன்று, நல்லாரோடு உறவு கொள்வதும் நன்று, நல்லாரைப் பேசுவதும் நன்று’ என்ற அடிப்படையில் இவரைக் குறித்து தெரிந்து கொள்ள நேரில் சந்தித்தோம். பார்த்தவுடன் பல நாள் பழகிய நண்பருடன் உரையாடுவதுபோல, தனது வாழ்க்கை அனுபவங்களை, எதிர்கால நோக்கங்களை வெளிப்படையாக பேச ஆரம்பித்துவிட்டார்.

அங்கே விழுந்த சில கேள்விகளும், விழுதான பதில்களும் இங்கே உங்களுக்காக…

 

தங்களுடைய ஆரம்ப காலம்..?

 

கோவை மாவட்டம் பேரூர் எனது சொந்த ஊர். தந்தை சி.எம்.சீனிவாசன், தாய் எஸ்.சாந்தா. இவர்களுக்கு என்னுடன் ஐந்து ஆண் பிள்ளைகள். நான் மூன்றாவது பையன். எங்களின் பாரம்பரிய நகைத்தொழில் செய்து கொஞ்சம் வசதியுடன் வாழ்ந்து வந்தோம். நான் பத்தாவது படித்துக்கொண்டிருந்தபோது, என் மூத்த அண்ணன் அவருடைய காதல் மற்றும் எனது குடும்பத் தொழில் சார்ந்த பிரச்னை ஆகியவற்றின் காரணமாக தனது 21 வயதில் தற்கொலை செய்துகொண்டார். அதைக் கண்டு வருந்தாத எனது பெற்றோர், அண்ணனின் மரணத்திற்கு காரணமான தந்தையின் வார்த்தைகள், அந்த சூழ்நிலை என்னை மனரீதியாக மிகவும் பாதித்தது. திடீரென வாழ்க்கையில் ஏற்பட்ட விபரீத சூழ்நிலையால் துவண்டுபோனேன். பள்ளிக்கூடம் செல்லவில்லை. எல்லாம் வெறுத்துப்போனது. அந்த சமயத்தில் அம்மாவுக்கு உடல்நிலை மிகவும் மோசமாகி, யானைக்கால் போன்று கால்கள் வீங்கி, வயிறு வெடித்து இறந்துவிடுகிறார். முற்றிலும் செயலற்றுப்போனேன்.

அந்த 17 வயதில், வீட்டைவிட்டு வெளியேறி கடவுள், விதி, கர்மா ஆகியவற்றை உணர வேண்டி ஆன்மிகப் பயணம் செல்கிறேன், அதை சந்தியாசம் என்றும் சொல்லலாம். வெள்ளியங்கிரி மலை, திருவண்ணாமலை, ஒடிசா, கொல்கத்தா, ஹரித்துவார் என காவி கட்டிக்கொண்டு சுற்ற ஆரம்பித்துவிட்டேன். அப்போது ஆன்மிக குருமார்களிடமும், சந்நியாசிகளிடமும் தொடர்பு ஏற்பட, யோகக் கலையும் ஆன்மிகமும் கற்றுக்கொண்டு இதுதான் என் வாழ்க்கை என்று முடிவுசெய்துவிட்டேன்.

அந்த வயதிற்கேற்ற பேச்சுக்கள் போய்விட்டன. ஆன்மிக உரையாற்றுகிறேன். அதைப் பலர் பாராட்டுகின்றனர். சத்திரசாவடியில் உள்ள ராமகிருஷ்ண மடம் மற்றும் வெள்ளியங்கிரி மலையைச் சேர்ந்த மடம் ஆகியவற்றை எடுத்து நடத்த எனக்கு வாய்ப்புகள் வருகின்றன.

அந்த நேரத்தில் எனக்கு உதவியாக இருந்த மூதாட்டி ஒருவர், ஈஸ்வரா நீ யார் என்பதைப் புரிந்துகொள்ள இந்த ஆன்மிகம் உனக்கு உதவும். ஆனால் இங்கே இருக்க வேண்டியவனல்ல நீ. உன் வாழ்க்கைப் பயணம் மக்களோடு மக்களாக இருக்க வேண்டும் என்கிறார். அதேபோல் ஹரித்துவாரில் நான் கண்ட சில பொன்வார்த்தைகள், ‘இந்த வாழ்க்கையில் நீ யாராக இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது முழுக்க முழுக்க உன் பொறுப்பு’ என்பதும் என் சிந்தனைகளில் தீயைப் பற்ற வைக்கின்றது. சில இரவுகள் தூக்கமில்லை. நீண்ட நெடும் யோசனைக்குப் பின்னர் மூன்று வருட ஆன்மிக நாட்டத்தை நிறுத்தி 20 ஆவது வயதில் திரும்பவும் சமூக வாழ்க்கைக்குத் திரும்ப முடிவெடுத்தேன்.

சாதாரண மனிதனாய் இருந்து, ஆன்மிகப் பாதையில் பயணித்த பின்னர் மீண்டும் ஏற்றுக்கொண்ட சகஜ வாழ்க்கை எப்படியிருந்தது?

வயது குறைவு என்றாலும் அந்த காலகட்டங்களிலேயே குடும்ப சூழ்நிலை கருதி பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டேன். எனது ஆன்மிகப் பயணம் அறிவில் தெளிவைக் கொடுத்தது, புண் பட்ட மனதை பண்பட்ட நிலமாக மாற்றியது. ஆக, தெளிந்த சிந்தனை, நேர்கொண்ட பார்வையுடன் என் அடுத்தகட்ட வாழ்க்கையை வாழ முடிவெடுத்தேன். அதேநேரம் சந்தியாசத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கவில்லை. அந்த சந்தியாச வாழ்க்கை அனுபவங்களை சமூகத்திற்கு பயன்படுத்தலாம் என்றும் அதற்கான பேரும் புகழும் பணமும் பெறுவதே தற்போதைய தேவை என்றும் உணர்ந்து அதற்கான ஓட்டத்தை ஆரம்பித்தேன்.

அது எந்தமாதிரியான ஓட்டம்?

நாமாக ஓடுவதற்கும் சிங்கம் ஒன்று நம்மைத் துரத்தும்போது ஓடுவதற்கும் வித்தியாசம் உண்டல்லவா?! அதுபோன்ற ஓட்டம் அது. கோவையின் அனைத்து இடங்களிலும் ஆட்டோ ஓட்டினேன். துணிகள் வாங்கி விற்று வியாபாரம் செய்தேன். அதோடு, எங்களது குலத்தொழிலான நகைப்பட்டறையையும் பார்த்துக்கொண்டேன். இந்த உடலால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு உழைக்கத் தொடங்கினேன். நேரம், உணவு எதையும் பார்க்காமல் ஓடினேன். பின்னர் 2001 இல் அண்ணாமலையார் ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடையை ஆரம்பிக்கிறேன். எனது தம்பிகளுக்கு திருமணம் செய்துவைத்து, அவர்களை எங்களது குலத்தொழிலில் ஈடுபடுத்தினேன்.

உங்கள் திருமணம்?

பொதுவாக, அப்போது நான் திருமணம் பற்றி நினைக்கவில்லை. ஆனால் 2003 ஆம் ஆண்டு கிருத்திகா என்பவர் எனது அன்பு மனைவியாக அமைகிறார். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என பெரியோர் சொல்வார்கள். என் மனைவி எனக்கு இறைவன் அளித்த பாக்கியம். தற்போது பத்தாவது படிக்கின்றான் எனது மகன் ஈ.சதாசிவ பிரமேந்திரர். ஒரே மகள் ஈ.ரக்ஷிதா.

வாழ்க்கையில் வேறு பல சிறப்புகள்..?

திருமணத்திற்குப் பின்னர் எனது தொழிலில் முழு ஈடுபாடு காட்டினேன். அதனால் எனக்கு இந்தியாவிலேயே சிறந்த நகை வடிவமைப்பாளர் என்ற விருது கிடைக்கிறது. யோகா, தியானம் போன்றவற்றை முறைப்படி கற்றேன். பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை (எம்.ஏ.,) யோகா படிப்பையும் வேதாத்திரி மகரிஷியின் அறிவுத் திருக்கோயில் மூலமாக ஆசிரியப் பயிற்சியும் பெற்றேன். தொழில், ஆன்மிகம், வாழ்க்கை என மூன்றிலும் எனது தெளிந்த அறிவு, தேர்ந்த திறனுடன் செயல்பட்டு வெற்றிநடை போட்டதால் பாண்டிச்சேரி இந்தியன் பீஸ் யுனிவர்சிட்டியால்

முனைவர் பட்டமும் கை வந்தது. இதற்கடுத்து, நான் பிரச்னைகளில் இருந்து வெற்றிகண்டதைப்போல பாதிக்கப்பட்டோர்களும் பலன் அடைய வேண்டும் என்று விரும்பினேன்.

அதற்காக நீங்கள் செய்தது?

‘ஸ்ரீ ஆனந்த கல்பா பௌண்டேஷன்’ என்ற ஒரு சமூக சேவைக்கான அறக்கட்டளையை ஆரம்பித்தேன். அதன் மூலமாக ஆதரவற்ற முதியோர், குழந்தைகள், ஏழை மாணவர்களுக்கு உதவுவது, அரசுப் பணிகளில் சிறந்து விளங்கும் பல்வேறு துறை சார்ந்த நல்லவர்களைக் கண்டறிந்து ஒவ்வொரு துறையிலும் 10 பேருக்கு ‘சிறந்த மனிதர் விருது’ வழங்கினேன். நம் பணியை யார் பாராட்டுகிறார்கள் என்று காத்திருப்பதைவிட, நாமே முன்னின்று நல்லவர்களை, வல்லவர்களைத் தேடி அவர்களைப் பாராட்டுவோம் என்ற அடிப்படையில் உருவானதுதான் இந்த விருது. பொதுவாக, நம்மிடம் அன்பு, அறம் போன்ற குணங்கள் குறுகிவருகின்றன. மனமும் அதனால் மருகி வருகின்றது. இதனால் சமுதாயம் பல்வேறு சிக்கல்களை சந்திக்கிறது. யாருக்கும் நிம்மதியில்லை. நிம்மதியைத் தேடுபவர்களும் இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. இந்நிலையிலிருந்து மாற்றம் கொண்டு வர எனது அறக்கட்டளை மூலமாக முயற்சிக்கிறேன்.

மகாபாரதத்தில் பீஷ்மர் அம்புப்படுக்கையில் படுத்திருந்தபோது அவர் ஒருவரிடம், ‘நான் எந்தப் பாவமும் செய்யவில்லை. யாருக்கும் எந்தத் துன்பமும் செய்யவில்லை. இருப்பினும், நான் சாக வேண்டும் என்று நினைத்தாலும் என் சாவு இன்னும் என்னை நெருங்கவில்லையே, ஏன்?’ என்கிறார். அதற்கு அவர், ‘உண்மைதான். நீ எந்தப் பாவமும் செய்யவில்லை. ஆனால் நீ வீற்றிருந்த சபையில் ஒரு பெண் மானபங்கப்படுத்தப்படும்போது மௌனியாக நின்றாயே. அது மிகப்பெரிய பாவம். அந்தப் பாவத்திற்கு சம்பளத்தைத்தான் இப்போது நீ அனுபவிக்கிறாய்’ என்றார். உண்மையில், நாம் வாழும் இந்த சமுதாயமும் அப்படித்தான் இருக்கிறது. கண் முன் எந்தத் தவறு நடந்தாலும் அதைக் கண்டுகொள்ளாமல் தன் வேலையைப் பார்த்துக்கொண்டு செல்கிறார்கள் இந்த மக்கள். அதன் பலனையே அவர்கள் அனுபவிக்கவும் செய்கிறார்கள்.

 

இதற்கு காரணம் என்ன? இந்நிலை மாற என்ன செய்வீர்கள்?

தன்னை அறிந்தவன் ஞானி. ஆனால் இந்த ஞானத்தை வழங்கும் கல்வியை நாம் போதிப்பதும் இல்லை. தேடுவதும் இல்லை. இதை 150 ஆண்டுகளுக்கு முன்பு நமது சுவாமி விவேகானந்தரே சொல்லியிருக்கிறார். மனிதனையும், அவன் மனதையும் அறியாமல் பொருளாதாரமும், கணக்கும் படித்து எந்தவிதப் பலனுமில்லை. ஏட்டுக்கல்வி கறிக்கு உதவாது என்பார்களே அப்படித்தான் இன்றைய கல்விமுறை. ஒரு பாடத்திட்டம், எப்போதும் மனதை பண்படுத்தாது. பணத்தை வேண்டுமானால் பெற்றுத்தரலாம். ஆக, நன்னெறி அறிந்துகொள்ள, மெய்ஞானம் பெற்றிட நமது ஆன்மிக குருகுலக் கல்வி அவசியம். இதைத் தருவதற்குண்டான முயற்சிகளை மேற்கொள்கிறேன். அதற்காக நாம் அப்போதைய காலகட்டத்திற்கும் சென்றுவிட முடியாது. அதேநேரம் தற்போதைய கல்விமுறையிலும் மாற்றம் செய்ய வேண்டும். ஆக, ஆன்மிகம் கலந்த அறிவியல் சார்ந்த புதிய கல்விமுறையைத் திட்டமிடுகிறேன். அதை முழுமைப்படுத்தி நானே கல்விக்கூடம் அமைத்துக் கற்பிப்பேன் அல்லது அந்த கல்விமுறையை அரசிடம் கொடுத்து பரவலாக்க முயற்சிப்பேன். அதற்கு முன்னர், தற்போது கிடைக்கும் இந்த கல்விமுறையைக் கூட பெற முடியாமல் இருப்பவர்களைத் தேடிச்சென்று உதவுகிறேன்.

 

உங்களின் குரு?

இந்த பிரபஞ்சமே எனது குரு. பிரபஞ்சத்தில் இருந்து கிடைக்காதது ஒன்றுமில்லை. இந்த பிரபஞ்ச ஓட்டத்தைப் புரிந்துகொண்டால் நீங்கள் யார், உங்கள் பயணம், நோக்கம் எல்லாம் தெளிவாகப் புரிந்துவிடும். எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறை பேராற்றல் உங்களுக்குள்ளும் இருக்கிறது. அதன் குரல் மிகவும் மென்மையானது, மிக நுட்பமானது, ஆழமானது, இனிமையானது. ஓர் இனிய சங்கீதத்தைப்போன்ற அந்த மெல்லிய குரலை (இசையை) கேட்பதற்கு நம் மனம் அமைதியில் திளைத்திருக்க வேண்டும். ஆனால் இங்கே உள்நோக்கி மனதை செலுத்த முடியாத அளவிற்கு சப்தங்கள் அதிகமிருக்கிறது. இதிலிருந்து மீண்டு, எந்தவித அகங்காரமும், ஆணவமும் இன்றி உங்கள் ஆழ்மனதோடு நீங்கள் ஒன்றினால் அனைத்தும் வசப்படும். அந்த ஒரு ஆனந்தத்தை நான் பெற்றுவிட்டேன். அதன் மூலமாக சுவாமி விவேகானந்தர், வேதாத்திரி மகரிஷி, ஓஷோ, புத்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர் ஆகியோரை பின்தொடர்கிறேன். அவர்கள் என்னை வழிநடத்துகின்றனர். அவர்களின் வழிகாட்டுதலில் என் வாழ்க்கை சிறப்பாக இருக்கிறது.

 

எதிரகால சிந்தனைகள்?

சமூகம், இன்று குழப்பான சூழலில் இருக்கிறது. அரசியல், கல்வி, சேவை அனைத்திலும் வியாபார புத்தி முன்னிற்கிறது. கலை, கலாச்சாரம், பாரம்பரியம் கெட்டு வருகிறது. ஆணவம், அதிகார துஷ்பிரயோகம், ஆடம்பர மோகம், பேராசை ஆகியவற்றால் மனித மனம் குப்பைக்கூளமாக நிரம்பிவழிகிறது. இதனை மேம்படுத்திட தூய்மையான அரசியல் தலைமை வேண்டும். நல்லவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். இளைஞர்கள் சமுதாயப் பணியாற்ற முன்வர வேண்டும். அளப்பரிய ஆற்றல், திறமை, சாதுர்யம் இருந்தாலும் இன்றைய இளைஞர்கள் அதனை பயன்படுத்துவது இல்லை. பல்வேறு போதைகளில் சிக்கித் தவித்து வருகின்றனர். நல்ல குறிக்கோளை வைக்க வேண்டும். அதை அடைய தீவிர வைராக்கியத்துடன் உழைக்க வேண்டும். எனது கொள்கையுடன் கட்சி ஆரம்பிப்பேன் அல்லது எனது கொள்கைக்கு ஒத்துப்போகும் கட்சியுடன் இணைந்து என் உழைப்பால் உயர்ந்த இடத்தை அடைவேன். எண்ணத்தில் தூய்மை, மனோதிடம் இருந்தால் நாம் எண்ணியது நமக்குக் கிடைக்கும். அதைக் கொடுக்க இந்த பிரபஞ்சம் தயாராக இருக்கிறது என்பதை நானறிவேன் என்றார்.

நேர்மறை சிந்தனை கொண்டவர்கள் காண்பது அரிது. அதிலும் ஆன்மிகம், தொழில், சமூக சேவை ஆகியவற்றில் சிறந்து விளங்கும் நேர்மறை சிந்தனையாளரை, தன்னம்பிக்கையாளரை காண்பது மிகவும் அரிது. அண்ணாமலை ஈஸ்வரன், அருள்நிதி ஈஸ்வரனாக உயர்ந்தது காலத்தின் கைங்கரியமா? இல்லை, ஈஸ்வரின் அருளா? இல்லை, என்னால் முடியும் என்று முயன்ற இந்த ஈஸ்வரனின் உழைப்பா என்று பட்டிமன்றமே நடத்தலாம். எதுவாயினும், மாற்றத்தை தன்னுள் கண்டு, அதனை வெளியில் கொண்டுவந்து தன் வாழ்க்கையை மாற்றிக்கொண்ட இந்த மகாத்மா சொல்வது சமூகத்திற்கு சுருக்கமாக சொல்வது என்னவென்றால், காந்தி, நேரு, பெரியார், காமராஜர் போன்றவர்களை வாழ வேண்டும் என்று நினைக்காதீர்கள். நீங்களே அந்த மகாத்மாக்களைப்போல வாழ முயன்றிடுங்கள் என்கிறார். ஆம், முயன்றால் நாமும் மகாத்மாதான்.

 

அருள் கா. மணிகண்டன்