உலகின் 2-வது பெரிய சோலார் நிறுவனம்

உலக பணக்காரர் பட்டியலில் 16 வது இடத்தில், 70 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இருக்கும் கவுதம் அதானியின் கிரீன் எனர்ஜி லிமிடெட் (ஏஜிஇஎல்) நிறுவனம் சூரிய மின்சக்தி உற்பத்தியில், உலகளவில் இரண்டாவது பெரிய சோலார் பிவி (போட்டோவோல்டாயிக்) டெவலப்பர் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான மெர்காம் கேபிடல் குழுமத்தின் வருடாந்திர அறிக்கை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

மேலும், இந்த அறிக்கையின்படி முதல் 10 இடங்களைப் பிடித்த நிறுவனங்கள் ஆறு ஐரோப்பாவிலும் மூன்று வட அமெரிக்காவிலும் உள்ளன. மேலும், பட்டியலில் இடம்பிடித்த ஒரே தெற்காசிய நிறுவனம் அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் ஆகும். இந்தியாவின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமாகவும் ஏஜிஇஎல் உள்ளது. உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட 12 மாநிலங்களில் காற்றாலை மற்றும் சூரிய மின் நிலையங்களை நிறுவி அதிலிருந்து 8.4 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உற்பத்தி செய்கிறது.

முன்னதாக, அதானி குழுமத்தின் மீது ஹிண்டன்பர்க் ரிசர்ச் முன்வைத்த அனைத்து கார்ப்பரேட் மோசடி குற்றச்சாட்டுகளும் பொருத்தமற்றது என அமெரிக்க சர்வதேச வளர்ச்சி நிதிக் கழகம் உறுதிப்படுத்தியது பங்கு சந்தைகளில் அதானி குழுமத்தின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன. கடந்த வாரம் மட்டும் அதானியின் சொத்து மதிப்பில் 10 பில்லியன் டாலர் அளவுக்கு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.