55 வயதான முதியவருக்கு கருவிழிப்படலத்தில் உணர்திறனை வழங்கி குணப்படுத்தியது  சங்கரா கண் மருத்துவமனை 

கண்ணின் நரம்பின் செயல்திறன் இழப்பால் பாதிக்கப்பட்ட 55 வயதான முதியவருக்கு மீண்டும் கருவிழிப்படலத்தில் உணர்திறனை வழங்கி குணப்படுத்தியுள்ளது

கண் சிகிச்சை பராமரிப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் நிகழ்வாக, கருவிழிப்படல உணர்திறன் இழப்பால் அவதியுற்ற 55 வயதான ஒரு ஆண் நோயாளிக்கு வெற்றிகரமான சிகிச்சையின் மூலம் கோயம்புத்தூர் சங்கரா கண் மருத்துவமனை குணப்படுத்தியிருக்கிறது.

கருவிழிப்படலத்தில் திரும்பத்திரும்ப புண் ஏற்பட்டதாலும் மற்றும் பல்லை அகற்றியதற்குப் பிறகு தோலின் மேற்புற செல் சிதைவினாலும், கடுமையான வலி மற்றும் பகல் வெளிச்சத்தை பார்க்க இயலாமல் கண் கூசும் பிரச்சனை ஆகிய தினசரி சவால்களை எதிர்கொண்டு வந்தார்.

நரம்பு நாடி கருவிழிப்படல புண் என்று அறிவியல் ரீதியாக இப்பாதிப்பு நிலை ஏற்படுகிறது. கண்ணின் ஆரோக்கியம் மற்றும் செயல்திறனைப் பராமரிப்பதற்கு இன்றியமையாததாக வழங்கும் கருவிழிப்படலத்திற்கு நரம்பு செயல்பாடு (சப்ளை) இல்லாத காரணத்தினால் இப்பாதிப்பு ஏற்படுகிறது.

கண்ணின் ஒவ்வொரு சிமிட்டலின்போதும் கண்ணின் மெல்லிய கண்ணீர் படல விநியோகம் நடைபெறுகிறது; காரின் கண்ணாடியைக் கழுவி சுத்தம் செய்வதற்கான வைப்பர் செயல்படுவதைப் போன்றதே இது. கண் சிமிட்டல்களின் மூலம் கண்ணிலிருந்து சிறிய தூசி மற்றும் அன்னிய துகள்கள் அகற்றித் தூய்மைப்படுத்தப்படுகின்றன. கண் சிமிட்டல்களுக்கு இடையே நிகழும் கண்ணீர் படலத்தின் இலேசான உலர்வு கருவிழிப்படலத்தின் நுண்ணிய நரம்பு முனைகளைத் தூண்டுகிறது. உலர்தலைக் கவனத்தில் கொண்டு சிமிட்டல் நிகழ்வதை இது தொடங்குவதால் உலர்வான பகுதி ஈரப்பதத்தைக் கொண்டு துடைத்து சுத்தம் செய்யப்படுகின்றன. கண் சிமிட்டலினால் கண்ணின் மேற்பகுதியை ஈரப்பதமாக்கும் இந்த எளிய செயல்முறையானது கருவிழிப்படலத்தின் செழுமையான நரம்பு முடிவுறும் முனைகளினால் ஒழுங்குபடுத்தப்படுகிறது.

இதுகுறித்து கோயம்புத்தூர் சங்கரா கண் மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர். ஸ்ருதி தாரா கூறுகையில், கருவிழிப்படலத்தின் உணர்திறனின் முக்கியத்துவம் குறித்து விளக்குகையில், கண்ணின் மேற்புற ஆரோக்கியத்தைப் பேணுவதில் அதன் செழுமையான நரம்பு சப்ளையின் மூலம் மிக முக்கிய பங்கை ஆற்றுகிறது. இந்த உணர்திறன் குறையுமானால், கருவிழிப்படல புண்கள் மற்றும் தழும்புகள் / வடுக்கள் ஏற்படுவதற்கு வழிவகுக்கும்; இதற்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லையெனில் பார்வையிழப்பும் ஏற்படக்கூடும், என்று குறிப்பிட்டார்.

நான்கு மணி நேரம் நடைபெறுகிற இந்த சிகிச்சை செயல்முறையில் நோயாளியின் தொடைப் பகுதியிலிருந்து கெண்டை நரம்பின் ஒரு பகுதி எடுக்கப்பட்டு நெற்றியின் சிதையாத, முழுமையான நரம்போடு ஒட்டி இணைக்கப்படுகிறது. ஒட்டி இணைக்கப்பட்ட இந்த நரம்பு அதன்பிறகு கருவிழிப்படலத்தைச் சுற்றி உட்செலுத்தப்படுகிறது; உணர்திறன் இணைப்புகளின் மறு உருவாக்கத்தை ஏதுவாக்கும் இது, கருவிழிப்படல உணர்திறனை மீண்டும் கொண்டு வருகிறது.

வெங்கடேஷ் என்ற இந்நோயாளியின் கருவிழிப்படல புண் ஆறி இப்போது குணமடைந்து வருவதால் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அவர் கண்டிருக்கிறார். பாதிப்பிற்கு முந்தைய முழு இயல்பு நிலைக்கு வருவதற்கு ஏறக்குறைய 6 மாதங்கள் ஆகும். புரட்சிகரமான இம்மருத்துவ செயல்முறையானது, இதுபோன்ற நோயாளிகளுக்கு குணமடைதலுக்கான நம்பிக்கையை வழங்குகிறது; அதுமட்டுமன்றி எதிர்காலத்தில் கருவிழிப்படல மறுசீரமைப்பு சிகிச்சைகளுக்கும் வழிவகுக்கிறது, என்று டாக்டர். ஸ்ருதி விளக்கமளித்தார்.