அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தொடங்கியது இலவச நீட் தேர்வு பயிற்சி 

இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு மே 5 ஆம் தேதி நடைபெறவுள்ளதால், அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பயன்பெறும் வகையில் இலவச நீட் தேர்வு பயிற்சி வகுப்பு இன்று முதல் தொடங்கப்படுகிறது.

மத்திய  அரசு மருத்துவ படிப்புகளுக்காகக் கொண்டு வந்துள்ள நீட் தேர்வை, தமிழக அரசு கடுமையாக எதிர்த்து வருகிறது.  நீட் படிப்பிற்குப் பன்னிரண்டாம் பாடப் புத்தகத்தோடு, பயிற்சி வகுப்பு சென்று படித்தால் மட்டுமே தேர்ச்சி பெற முடியும் என்ற சூழலும் ஏற்பட்டுள்ளது.

மாநிலத்தில் இத்தேர்வுக்கான போராட்டம் ஒரு பக்கம் சென்று கொண்டிருந்தாலும், மாணவர்களின் கல்வியில் தடை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி வகுப்பு தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டிற்கான தேர்வு மே-5 ஆம் தேதி நடைபெறவுள்ளதால், விண்ணப்பம் செய்துள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் பயிற்சி வகுப்பு தொடங்க உள்ளது.  திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 9:15 – மாலை 4:30 மணி வரையில் நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது.