சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பி.எஸ்.ஜி. கல்லூரி கின்னஸ் சாதனை!

பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்வதற்காக 79.73 டன் பிளாஸ்டிக்கை சேகரித்து வெற்றிகரமாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. இது சுற்றுச்சூழல் செயல்பாட்டின் குறிப்பிடத்தக்க சாதனையாக கருதப்படுகிறது.

பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி பாடத் திட்டத்தில் ஒரு பகுதியாக சமூக பங்களிப்பு; சமூகத்துக்கு சேவை ஆற்றுவது’ உள்ளது. இதன் அடிப்படையில் சமூகத்தில் நிலவும் சுற்றுச்சூழல் பிரச்னை குறித்து ஆய்வு செய்வதற்கான முன்னெடுப்பில் மாணவர்கள் இறங்கினர்.

மாணவர்களின் ஆய்வின் அடிப்படையில் சுற்றுச் சூழலுக்கு மிகப் பெரிய பிரச்னையாக இருப்பது மறுசுழற்சி செய்யப்படாத பிளாஸ்டிக் கழிவுகள் என்பது கண்டறியப்பட்டது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையிலும், மாணவர்களிடம் பிளாஸ்டிக் கழிவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து மறுசுழற்சி செய்யும் பணியை பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் துவங்கியது.

பல மாதங்கள் தொடர்ச்சியாக எவ்வித தொய்வின்றி உத்வேகத்துடன் மாணவர்களின் துணையுடன் பணியாற்றி மொத்தம் 79.73 டன் பிளாஸ்டிக் பொருள்கள் சேகரிக்கப்பட்டன. இதுகுறித்து கின்னஸ் நிறுவனத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது.

கின்னஸ் சாதனை நிறுவனத்தின் பிரதிநிதி ஸ்வப்னில் தங்கரிக்கர்  முன்னிலையில், சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக்கை எடை போடும் நிகழ்வு ஜன. 31-ம் தேதி நடைபெற்றது.

இதை தொடர்ந்து,கல்லூரி சார்பில் மறு சுழற்சிக்காக 79.73 டன் பிளாஸ்டிக் சேகரிக்கப்பட்டது கின்னஸ் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டது.

இதையடுத்து, கல்லூரி வளாகத்தில் கின்னஸ் சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் முனைவர் டி.பிருந்தா வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவா வி. மெய்யநாதன் பங்கேற்றார். கௌரவ விருந்தினராக சிறுத்துளி நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் கின்னஸ் சாதனை புரிந்ததற்கான சான்றிதழ் கல்லூரி நிர்வாகத்துக்கு கின்னஸ் நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்டது. விழாவில் கல்லூரி செயலாளர் முனைவர் டி.கண்ணையன் நன்றி கூறினார்.