கே.பி.ஆர். கல்லூரியில்  துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி மையம் தொடக்கம் 

கே.பி.ஆர். கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் இந்தியத் திருநாட்டின் 75- வது குடியரசு தினவிழா மற்றும் துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி மையத் தொடக்க விழா நடைபெற்றன.

நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அர்ஜீனா விருதாளர் மற்றும் டோக்கியோ-2020 ஒலிம்பிக் போட்டியாளர்  இளவேனில் வாலறிவன் பங்கேற்று, இந்தியத் திருநாட்டின் மூவர்ணக்கொடியினை ஏற்றினார்.

இதையடுத்து, துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி மையத் தொடக்க விழாவிலும் கலந்து கொண்டு,  மையத்தைத் தொடங்கி வைத்தார்.  அவர் தம் உரையில் இந்தியத் திருநாட்டின் வளர்ச்சி நிலை பற்றியும் அதன் மேம்பாட்டிற்கு எதிர்காலத் தலைமுறையினர் ஆற்றவேண்டிய செயல்பாடுகள் குறித்தும் எடுத்துரைத்தார். கல்வி நிலையில் கவனம் செலுத்துவதோடு விளையாட்டுப் போட்டிகளிலும்  கலந்து கொண்டு  மாணவர்கள் தங்களின் தனித்திறனை  வளர்த்துக் கொள்ள வேண்டுமென்று விளக்கினார்.

மேலும், ரஷ்யா நிதிப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத்துறை பேராசிரியர் தினரா ஆர்.ஒர்லோவா சிறப்புரை வழங்கினார்.

கே.பி.ஆர். கல்விக்குழுமங்களின் தலைவர் கே.பி.ராமசாமி கலந்து கொண்டு இந்தியக் குடியரசின் முன்னேற்றம் என்பது ஒவ்வொரு தனிமனிதரின் முன்னேற்றத்தில் உள்ளது என்றும்,  துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி மையம் தொடங்கியதன் தேவை குறித்தும் தலைமையுரை ஆற்றினார்.

நிகழ்வில் மாணவர்களின் தேசபக்தி நடனம், யோகா, சிலம்பாட்டம்  உள்ளிட்ட கலை நிகழ்ச்சிக்கள் அரங்கேற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து  குடியரசு தினவிழாவினை முன்னிட்டு நடத்தப்பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பெற்றன.

இதில் கல்லூரி முதல்வர் கீதா,  புலமுதன்மையர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், நிர்வாக அலுவலர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.