கார் விற்பனை அதிகரிப்பு!

பல வகையான பரிணாம வளர்ச்சிகள் கண்டு வரும் மனிதர்களின் வாழ்வில் கார், பைக் போன்ற வாகனங்கள் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது என்றே சொல்லலாம். முன்பெல்லாம், மேல்தர தட்டு மக்களிடம் மட்டுமே அதிகம் பயன்பாட்டில் இருந்த கார்கள், தற்போது நடுத்தர மக்களின் அத்தியாவசியமாக உள்ளது.

இந்தியாவில் சுமார் 3.50 லட்சத்தில் இருந்து கார்கள் விற்பனை ஆகிறது. அதோடு, பொதுத்துறை வங்கிகள் மற்றும் நிதி சேவைத் துறைகளும் குறைந்த வட்டியுடன் கூடிய கார்களுக்கான கடன்களை வழங்கி வருகிறது. இதன் காரணமாகவும் நடுத்தர மக்கள் மத்தியில் கார் பயன்பாடுகள் அதிகரித்துள்ளன. அதே சமயத்தில், அனைத்து தரப்பிலும் கார்களுக்கான தேவைகள் அதிகரித்து உள்ளன.

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இதன் தேவைகள் அதிகரிக்கவே செய்யும். இதை உறுதி செய்யும் வகையில், 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் கார் விற்பனை 8 சதவீதம் அதிகரித்து உள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டில் 38 லட்சம் கார்கள் விற்பனையான நிலையில் 2023 ஆம் ஆண்டு 41.10 லட்சம் கார்கள் விற்பனையாகி உள்ளன. குறிப்பாக, மாருதி சுசூக்கி 20 லட்சம் கார்களை விற்பனை செய்திருக்கிறது. 2023 ஆம் ஆண்டில் விற்பனையான கார்களின் சராசரி விலையில் ரூபாய். 11.50 லட்சம் அதிகரித்து இருக்கிறது.