வேலூரில் விரைவில்  சுரங்கப்பாதை – பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு

ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில், வரும்  20, 21ம் தேதி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதோடு, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழக முதல்வர் ஸ்டாலின் வரும் நிலையில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் காந்தி ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

புதிதாக உருவான ராணிப்பேட்டை மாவட்டத்தில், புதிய ஆட்சியர் அலுவலகக் கட்டிட திறப்பு, சி.எம்.சி. மருத்துவமனையின் புதிய கிளை திறத்தல் மற்றும் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் வரும் 20ம் தேதியன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.

அதனைத்தொடர்ந்து, வேலூர் கோட்டை மைதானத்தில் வரும் 21 ம் தேதி, தமிழக முதல்வர் வருகை தந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கவுள்ளார்.

இதற்கு,  ராணிப்பேட்டை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் கட்டுமான பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதில் 90% நிறைவடைந்துள்ள  கட்டுமான பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன், வேலூர் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் ஆகியோர் கூட்டாக இணைந்து நேரில் ஆய்வு செய்தனர்.

நிறைவு பெற்ற கட்டுமான பணிகள் குறித்து அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட அமைச்சர்கள் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்குமாறு ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தினர்.

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு  செய்தியாளர்களை சந்தித்து  பேசியதாவது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 21 ம் தேதி வேலூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்தும் சுமார் 15,000 பேருக்கு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க இருப்பதாகவும் கூறினார்.

வேலூர் மாவட்டம் மாதனூர் மற்றும் விரிஞ்சிபுரம் பாலாற்றின் குறுக்கே மேம்பாலங்கள் அமைக்கும் பணிக்கு திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. விரிஞ்சிபுரம் மேம்பாலத்திற்காக ரூ.30 கோடியும், மாதனூர் மேம்பாலத்திற்காக ரூ.28 கோடியும் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு விரைவில் பணிகள் துவங்கும்.

தமிழகத்தில் கோவை, சென்னை,மதுரை ஆகிய மாநகரங்களில் பறக்கும் சாலைகள் உள்ளதை போல் வரலாற்று சிறப்பு மிக்க வேலூர் நகரிலும் பறக்கும் சாலைகள் அமைக்கும் திட்டம் குறித்து சாத்திய கூறுகள் ஆய்வு செய்யப்பட உள்ளது.

வேலூரில்  சி.எம்.சி மருத்துவமனையின் அருகில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சுரங்கப்பாதை ஒன்று அமைக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்காக,  சட்டமன்றத்திலும் கோரிக்கை வைத்து, அதனை நிறைவேற்ற உறுதியளித்துள்ளோம். அதன்படி சுரங்கப்பாதை அமைக்க சி.எம்.சி மருத்துவமனை நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்

அவர்கள் ஒப்புதல் தந்தால் மகிழ்ச்சியாக அமைப்போம் .இல்லையென்றால் எங்களுக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி நில எடுப்பு செய்து விரைவில் சுரங்கப்பாதை அமைப்போம் என்று கூறினார்.