மழலையர் வகுப்புகளுக்கு 5000 ஆசிரியர்கள் நியமனம்

எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு 5,000 சிறப்பாசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாகப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன் கடந்த 2018ம் ஆண்டில் அதிமுக அரசு, தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளுடன் இணைந்த அங்கன்வாடிகளில் மழலையர் வகுப்புகளைத் தொடங்கியது.

இதில் மொத்தம் 2,381 பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டு, அவற்றில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான குழந்தைகள் படித்து வந்தனர். மேலும், கொரோனா காரணமாகக் கடந்த 2 ஆண்டுகளாக எல்கேஜி, யூகேஜி மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை.

இந்நிலையில் 2022- 23ம் கல்வியாண்டில், அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வந்த மழலையர் வகுப்புகள் அங்கன்வாடிகளுக்கு மாற்றுவதாகவும், மழலையர் வகுப்புகளுக்காக நியமிக்கப்பட்டிருந்த இடைநிலை ஆசிரியர்கள், ஏற்கனவே பணியாற்றி வந்த பள்ளிகளுக்கு அனுப்பவதாகவும் தொடக்கக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

தற்போது எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை சமூக நலத்துறை மீண்டும் நடத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பள்ளிக் கல்வித்துறையே நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்ததால், எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை அரசுப் பள்ளிகளில் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்காக ஆசிரியர்கள்  நியமிக்கப்படுவார்கள் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்து இருந்தது.

மேலும், 2381 அங்கன்வாடி மையங்களில் இயங்கிவரும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில்  5 ஆயிரம் சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

அதன்படி, 2500 சிறப்பு ஆசிரியர் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். அவர்கள் டிடிஎட் என்னும் ஆசிரியர் பயிற்சி முடித்த பெண்களாக இருக்கவும் பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், ஆகஸ்ட் மாதம் இந்த வகுப்புகள்  தொடங்கும் என்றும் பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.