முழுமையான நிறைவான வாழ்க்கை என்றால் என்ன?

கேள்வி: முழுமையான, நிறைவான வாழ்க்கை என்றால் என்ன? அதனை எட்டிய மனிதரை அறிவதற்கான அளவுகோல் எது?

சத்குரு : ஒருசில செயல்களைச் செய்வதால் மட்டுமே உங்கள் வாழ்க்கை, முழுமையை எட்டிவிடாது. வாழ்வின் எல்லா நிலைகளிலும், “இது மட்டும் நடந்தால் என் வாழ்க்கை முழுமையடையும்” என்கிற எண்ணம் உங்களுக்குள் ஏற்பட்டிருக்கும். குழந்தையாக இருக்கும்போது, ஒரு பொம்மை கிடைத்தால் என் வாழ்க்கை நிறைவடையும் என்று நினைத்தீர்கள். அந்த பொம்மை கிடைத்தது. ஆனால் மூன்று நாட்களில், அதைக் குப்பைத் தொட்டியில் வீசிவிட்டீர்கள். உங்கள் வாழ்க்கை முழுமையடையவில்லை.

நீங்கள் பள்ளியில் படித்தபோது, தேர்வில் வெற்றி பெற்றுவிட்டால் வாழ்க்கை முழுமையடையும் என்று கருதினீர்கள். வெற்றி பெற்றீர்கள். ஆனால் எதுவும் நடக்கவில்லை. படித்து முடித்துவிட்டால் வாழ்க்கை முழுமையடையும் என்று நினைத்தீர்கள். படித்து முடித்தீர்கள். ஆனால், சொந்தக் காலில் நிற்காவிட்டால் இந்தக் கல்வியால் என்ன பயன் என்று கருதினீர்கள். வேலையும் கிடைத்தது. மூன்று மாதங்களுக்குப் பிறகு, கழுதை போல் உழைப்பதால் என்ன பயன் என்று எண்ணத் தொடங்கினீர்கள். உங்கள் மனதில் இருப்பவரைத் திருமணம் செய்துகொண்டால், வாழ்க்கை முழுமையடையும் என்று நினைத்தீர்கள், அதுவும் நடந்தது. அதற்குப் பிறகு என்ன நடந்தது என்று உங்களுக்கே தெரியும். கொஞ்சம் வயதானவர்களுக்கோ, தங்கள் மகளைத் திருமணம் செய்து கொடுத்துவிட்டால், வாழ்க்கை முழுமையடைந்துவிடும் என்ற எண்ணம். ஆனால் மகளைத் திருமணம் செய்து கொடுத்ததும் தான் தொல்லைகள் ஆரம்பமாகின்றன. இது இப்படியே தொடர்கிறது. நீங்கள் என்ன செயல் செய்தாலும், வாழ்க்கை முழுமையடைவதில்லை. செயல்களால் வாழ்க்கை முழுமை பெறாது. உள்தன்மை முழுமைபெறும் போதுதான் வாழ்க்கை முழுமைபெறும்.

உங்கள் உள்தன்மை எல்லையில்லாததாக இருக்குமானால், உங்கள் வாழ்க்கையும் எல்லையில்லாததாக இருக்கும். நீங்கள் கண்மூடி அமர்ந்திருந்தாலும் சரி, வித விதமான செயல்களில் ஈடுபட்டாலும் சரி, வாழ்க்கை முழுமையானதாக இருக்கும். ஒரு மனிதன் தனக்குள் செயல்கள் செய்வதற்குத் தேவையில்லாத நிலையை அடைந்து, வெளிச்சூழலுக்குத் தேவையான செயல்களை மட்டுமே செய்து கொண்டிருந்தால், அந்த மனிதன் எல்லையில்லாத தன்மையை எட்டியிருப்பதாகக் கொள்ளலாம். தனக்காக, செயல் செய்ய எந்தத் தேவையும் இல்லாத ஒரு மனிதனை நாம் முழுமையான மனிதன் என்று சொல்லலாம். ஒன்றன்பின் ஒன்றாக நீங்கள் தொடர்ந்து செயல்களில் ஈடுபட்டு வருவது எதற்காக? முழுமை அடைவதற்காகத்தான் இல்லையா?

நிறைய செயல்கள் செய்பவர்களிடம், ஏன் இவற்றையெல்லாம் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டால், “உணவு வேண்டும், மனைவி குழந்தைகளையெல்லாம் யார் பார்த்துக் கொள்வது?” என்று பதில் சொல்வார்கள். அவர்களிடம், “உணவுக்காக ஏன் இதையெல்லாம் செய்கிறீர்கள்? ஆசிரமத்திற்கு வந்து விடுங்கள். உங்களுக்கும், உங்கள் மனைவி, குழந்தைகளுக்கும் நாங்கள் உணவு தருகிறோம். அங்கே வந்து அமைதியாக அமர்ந்திருங்கள் போதும்” என்று நாங்கள் சொன்னால், அவரால் அங்கு வந்து ஒருநாள்கூட உட்கார முடியாது. ஏன்? மூன்று மணி நேரங்கள் கூட உட்காரமாட்டார்.

“உங்கள் எல்லாத் தேவைகளையும் பார்த்துக் கொள்கிறோம். அமைதியாக இருங்கள்” என்றாலும் இருக்க முடிவதில்லை. ஏனெனில் உள்தன்மை நிறைவடைந்தததாக இல்லை. சில செயல்கள் மூலம் நிறைவை எட்ட முயல்கிறீர்கள். அந்த செயல்களில் நோக்கம் உணவோ, மற்ற வசதிகளோ இல்லை. முழுமைக்கான தேடலே அது. இது விழிப்புணர்வோடு நடந்தாலும், விழிப்புணர்வற்ற நிலையில் நடந்தாலும், அதன் நோக்கம் என்னவோ எல்லையின்மையைத் தொடுவது தான். இது மட்டும் நிச்சயம்.

உங்கள் உள்தன்மை முழுமை அடைந்துவிட்டால், அங்கே செயல்களுக்கான அவசியம் இருக்காது. வெளிச்சூழலுக்காக சில செயல்கள் செய்ய வேண்டியிருந்தாலும் அவற்றை ஆனந்தமாக செய்வீர்கள். தேவைப்படாத போது, வெறுமனே கண்மூடி அமர்ந்துவிடலாம். செயல்கடந்த நிலைக்கு மனிதன் வருவதே முழுமையடைவது என்று சொல்வதன் அர்த்தம், அன்றாடப் பணிகளை செய்ய வேண்டாம் என்பதல்ல. வெளிச்சூழலுக்கு வேண்டியிருந்தால் இருபத்தி நான்கு மணிநேரமும் பணி செய்யலாம். ஆனால் அவரது உள்தன்மைக்கு அது அவசியமில்லை. அவர் செயல்களுக்குக் கட்டுப்பட்டவரல்ல. செயல்கள் மூலம் அடையாளம் காணப்படுபவரும் அல்ல. செயல்கள் இல்லாதபோதும் அவர் தன்மை மாறாமலேயே இருக்கும்.