அரசியல் பிழைத்தோர்க்கு…

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. அதுதான் இப்போது இலங்கையில் நடந்தேறி வருகிறது. அங்கு மெல்ல தொடங்கிய பொருளாதார நெருக்கடி, சொந்த நாட்டிலுள்ள மக்கள் கலவரத்தில் ஈடுபடும் அளவு வெடித்துக் கிளம்பி இருக்கிறது. நாடு முழுவதும் அங்கு வன்முறை தாண்டவமாடுகிறது. இது ஒரே நாளில் நடந்தது அல்ல. பல ஆண்டுகால அரசியல் தவறுகள் இன்று வெளிச்சத்திற்கு வந்து வெடித்து சிதறி கொண்டு இருக்கின்றன. இலங்கையின் மிகப்பெரிய பொருளாதார வளம் என்பது அதன்  சுற்றுலாத் தொழில் மற்றும் தேயிலை உற்பத்தி சார்ந்தே இருந்து வந்தது. இது முழுக்க முழுக்க வெளிநாடுகளை சார்ந்த பொருளாதாரம் ஆகும். உள்நாட்டு தேவைகளுக்கு என்று அடிப்படையான பெரிய திட்டங்கள் எதுவும் அங்கு வகுக்கப்படவில்லை. வெற்று அரசியல் முழக்கம் தொடங்கி ஒரு கட்டத்தில் இனவாத மோதலில் வந்து முட்டி நின்றது.

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழின போராளிக் குழுக்களுக்கும் இலங்கை ராணுவத்திற்கும் மோதல் தொடர்ந்து கொண்டே இருந்தது. இந்த காலகட்டத்தில் ஒரு பொருளாதார சீரற்ற தன்மையும், அமைதியின்மையும் கூடவே வந்து கொண்டிருந்ததை அரசியல்வாதிகள் கவனிக்கவில்லை. இது நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரும் தடை, வளர்ச்சிக்கு எதிரானது என்று ஆட்சியில் இருந்தவர்களும், ஆட்சிக்கு வரத் துடித்த அரசியல்வாதிகளும் எண்ணிப் பார்க்கவே இல்லை.

அடுத்த தேர்தலை பற்றியும், பதவிகளை பற்றியும், நாற்காலிகளை பற்றியும் சிந்தித்தவர்கள் நாட்டின் எதிர்காலம் பற்றியும், மக்களின் எதிர்காலம் பற்றியும் சிந்திக்க மறந்தனர். நாட்டின் சீரழிவுக்கு காரணமாக, இனமோதல் உருவாக்கப்பட்டு, மக்கள் உணர்ச்சிமயமான நிலையிலேயே இருக்க வைக்கப்பட்டனர். போராளிக் குழுக்கள்தான் சீர்குலைவுக்கு காரணம் என்றும் சித்தரிக்கப்பட்டனர். அந்த திசையில் இலங்கை அரசியல்வாதிகளுக்கு கிடைத்த பெரிய வெற்றிதான் பிரபாகரன் மரணமும், மஹிந்த ராஜபக்சவின் பதவிக்கான எழுச்சியும் ஆகும்.

2009 இல் அதற்கு முன்பு பாரம்பரியமாக இருந்த எல்லா அரசியல்வாதிகளையும் பின்னுக்கு தள்ளிவிட்டு இலங்கை அரசியலில் ராஜபக்ச குடும்பம் ஒரு அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்தது. உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் மகிந்த ராஜபக்சா என்ற புதிய அரசியல் பிம்பம் உருவானது. மெல்ல மெல்ல ராஜபக்ச குடும்பத்தின் உறுப்பினர்கள் அரசாங்கத்தின் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டனர். 10 ஆண்டுகளில் இலங்கை அரசாங்கம் ராஜபக்ச குடும்பத்தின் கையில் வந்தது. கோத்தபய ராஜபக்சே இலங்கை அதிபர், மகிந்த ராஜபக்ச பிரதமராகவும், மற்ற சில குடும்ப உறுப்பினர்கள் அமைச்சர்களாகவும், ஆலோசகர்களாகவும் பொறுப்பேற்றனர்.

ஆனால் இவையெல்லாம் அரசியல் ரீதியாக நிகழ்ந்ததே தவிர, பொருளாதார ரீதியாக எந்த மாற்றமும் இல்லாமல் இலங்கை எனும் நாடு மூழ்கும் கப்பல் போல மூழ்கிக் கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் சீனாவிடம் ஒரு மாபெரும் தொகையை பெற்றுக்கொண்டு துறைமுகம் உள்ளிட்ட சலுகைகள், ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. என்றாலும், ஓட்டை விழுந்த கப்பலான இலங்கை பொருளாதாரத்திற்கு அது கடன் சுமையாக மாறியதே தவிர பொருளாதாரம் மீண்டு வரவே இல்லை.

ஒரு கட்டத்தில் தீவிரவாதம், குண்டுவெடிப்புகள்,  கூடவே அரசின் தவறான கொள்கை முடிவுகள் குறிப்பாக இயற்கை வேளாண்மை ஊக்குவிப்பதற்காக செயற்கை உரங்களுக்கு விதித்த தடை எல்லாம் சேர்ந்து இலங்கையை பொருளாதார ரீதியாக கடுமையாக சீர்குலையச் செய்தன. சிக்கல் நேரடியாக மக்களை தாக்கியது.

அன்றாடம் பயன்படுத்தும் அரிசி, பால் உள்ளிட்ட பொருட்களின் விலை ராக்கெட்டில் எகிறியது. அடிப்படை தேவைகளான மின்சாரம், பெட்ரோல் போன்றவை எட்டாக்கனியாக மாறின. கண்ணுக்கெட்டிய தூரம் வரை தீர்வு காணப்படவில்லை என்ற நிலை தெரிந்ததால் மக்கள் நேரடியாக களத்தில் இறங்கினர். வன்முறை வெடித்தது.

வழக்கமான சட்டங்கள், கட்டுப்பாடுகள், அடக்குமுறைகள் மூலமாக இதனைக் கட்டுக்குள் கொண்டுவந்து விடலாம் என்று நினைத்த ராஜபக்ச குடும்பத்தின் கனவு பலிக்கவில்லை. உண்மை தீயாகப் பற்றி எரிகிறது. மக்கள் போராட்டம் தொடர்ந்து, ஆங்காங்கே வன்முறை சம்பவங்களும் தொடங்கிவிட்டன.

எளிதாக இதனை எதிர்கொள்ள நினைத்த அரசியல்வாதிகளின் வீடுகள் இன்று  தீப்பற்றி எரிகின்றன. தனது காரை வழிமறித்த கூட்டத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பிறகு உயிர் பிழைக்க ஓடினார்.  ஒளிந்து கொள்ள முடியாமல் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு மரணம் அடைந்திருக்கிறார்.

தமிழ் போராளிக் குழுவின்  தலைவரான பிரபாகரனை கொன்று இனவாத சிக்கலை முடிவுக்குக் கொண்டு வந்த நிகரற்ற தலைவராக தன்னை காட்டிக் கொண்ட, நிலைநிறுத்தி வந்த மகிந்த ராஜபக்சவின் பங்களாவின் மாளிகை வாயில்கள் இன்று  போராட்டக்காரர்களால்  உடைக்கப்பட்டு இருக்கின்றன. இராணுவத்தின் உதவியுடன் தப்பிச் சென்ற அல்லது வெளியேறிய மஹிந்த ராஜபக்ச எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை.

பசித்தீயால் உருவாகும் பொருளாதார நெருப்பு, நாட்டை தாக்கும் பொழுது அந்த தீயை தடுக்க யாராலும் முடியாது. பொருளாதாரத்தை கவனிக்காமல் ஆட்டம்போடும் அரசியல்வாதிகளும், அதனை அனுமதிக்கும் மக்களும் என்ன பாடுபடுவார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு தான் இன்றைய இலங்கையின் நிலை.