செவிப்புலன் பரிசோதனையும், விழிப்புணர்வின் பலனும்!

கருவாக இருந்து உடலாக மலர்ந்து பத்து மாதங்களுக்கு பின் முதன்முதலாக உலகத்திற்குள் வந்துசேரும் குழந்தைகள் முதலில் செய்வது அழுவதே.

அந்த முதல் அழுகை சத்தத்தை கேட்டதும் மனதில் தோன்றும் பேரின்பத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லாமல் பெற்றோரும், குடும்பத்தினரும் நிற்பர்.

ஆனால் தாயின் தாலாட்டு பாடலை கூட கேட்டகமுடியாமல் ஒரு குழந்தை நிசப்தத்தில் மூழ்கி இருக்கும்போது அதன் நிலை எப்படி இருந்திருக்கும்? இதை பற்றி தான் இங்கு காணவிருக்கிறோம். அதற்கு முன்…

முக்கிய சோதனை :

மேலை நாடுகளில் குழந்தைகள் பிறந்த சில நாட்களிலேயே அவர்களின் எதிர்கால நலனுக்காக கட்டாயமாக சில முக்கிய மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வார்கள்.

1990களின் இறுதியில் அமெரிக்காவின் விர்ஜினியா மாநிலத்தை சேர்ந்த மருத்துவர் பெரீ ஸ்ட்ராஸ்னிக் என்பவர் எடுத்த முயற்சியால் அனைத்து புதிதாகப் பிறந்த குழந்தைகளின் செவிப்புலனை பரிசோதனை செய்வது முதல் கட்டமாக அங்கு கட்டாயமாக்கப்பட்டது.

இந்த சட்டம் இப்போது வளர்ந்த பல நாடுகளில் பின்பற்ற படுகிறது. இந்தியாவிலும் பல நகரங்களில் உள்ள பல்துறை சிறப்பு மருத்துவமனைகளில் கடைபிடிக்கப்பட்டாலும் சிறு மருத்துவமனைகளில் இது அவ்வளவாக இருப்பதில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதன்முதலாய் தாயின் குரல் கேட்ட சேய்:

கிறிஸ்டி என்ற அமெரிக்க பெண்ணிற்கு பிறந்த குழந்தை சார்லி. பிறவியிலேயே இந்த குழந்தைக்கு செவிகளின் திறன் மிக மிக குன்றியிருந்தது. நல்ல வேலையாக அங்கு அந்த குழந்தை செவிப்புலன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதால், அதற்கு உள்ள குறைபாடு பெற்றோர்க்கு உடனே தெரியப்படுத்தப்பட்டது.

ஹீரிங் எய்ட் (Hearing aid) எனும் கருவி  முதலில் அந்த குழந்தைக்கு பொருத்தப்பட்டது.அதற்கு முன்புவரை தன்னுடைய தாய் தன்னை கொஞ்சுவதை கேட்டிராத அந்த குழந்தை, அந்த கருவி மூலம் கேட்க துவங்கியதும், பிரதிபலித்த உணர்வுகளை நீங்களே பாருங்கள்.

சில மாதங்களில், அறுவை சிகிச்சை மூலம் அந்த குழந்தையின் செவிகளில் காது உட்பதியக் கருவி (cochlear implant) பொருத்தப்பட்டது. ஒரு மாத இடைவேளைக்கு பின் குழந்தையின் காதிற்குள் அதன் சேவைகள் துவக்கி வைக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

இவை நடந்தது 2018ல். அதற்கு பின்னர் அந்த குழந்தை பெற்றோர்கள் உதவியுடன் மெல்ல மெல்ல தன்னை சுற்றி நடப்பதை நன்கு கேட்கத்துவங்கியது .

தற்போது அந்த குழந்தை பள்ளி செல்ல துவங்கியிருக்கிறது, அதன் தாயும் செவிகளில் பின்னடைவு உள்ள குழந்தைகள் நலன் பற்றி சமூக வலைத்தளங்களில் பேசிவருகிறார்.

தொழில்நுட்பமும் அறிவியலும் வளர்ந்துள்ளதால் மட்டும் இது சாத்தியமானதா என்றால் …. இல்லை. விழிப்புணர்வும், மருத்துவர்களின் அறிவுறுத்தலும் தான் இதற்கு பெரும் உதவியாக இருந்துள்ளது.

ஆரம்ப நிலையிலேயே குழந்தைகளின் உடலநலன் மீது அதிக கவனம் செலுத்துவது அவர்களின் எதிர்காலத்திற்கு பெற்றோர்கள் தரும் விலைமதிப்பில்லா பரிசு ஆகும்.

Article by David Karunakaran.S