பாஜக சார்பில் நமோ பொங்கல்: அண்ணாமலை துவக்கி வைத்தார்

பாஜக சார்பில் நமோ பொங்கல் விழா காந்திபார்க் பொன்னையராஜபுரம் பகுதியில், பாஜக தேசிய மகளிரணி தலைவரும், தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தலைமையில் கொண்டாடப்பட்டது. இதனை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அண்ணாமலை பேசியதாவது: இன்றைய தினம் ஆர்.எஸ்.புரம் மண்டலத்தில் 208 பெண்கள் பொங்கல் வைத்துள்ளனர் என்றும் இதில் இளம் பெண்கள் பலர் கலந்து கொண்டது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழகத்தை காட்டிலும் சில மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகமாக இருக்கும் போது அம்மாநில அரசு கட்டுபாடுகளை விதித்து ஆலயங்களை திறக்க அனுமதி வழங்கியுள்ளதாகவும் ஆனால் தமிழகத்தில் முக்கிய திருவிழாவான தைப்பூச தினமன்று கோவில்கள் மூடப்பட்டிருக்கிறது. எனவே கட்டுபாடுகளுடன் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் கோவிலை திறக்க வேண்டுமென தெரிவித்தார்.

அரசு வழங்கிய பொங்கல் பரிசில் சில இடங்களில் தரமற்ற பொருட்கள் இருந்ததாக புகார்கள் எழுந்தும், தெரிந்தே அது விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் இதற்குக் காரணமான அமைச்சர்கள் மீதும் அதிகாரிகள் மீதும் எப்போது முதல்வர் நடவடிக்கை எடுப்பார் எனக் கேள்வி எழுப்பிய அவர், அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அது கேளி கூத்தாகிவிடுமென தெரிவித்தார்.

ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளை நேரடியாக மத்திய அரசு எடுத்து கொள்ளும் சட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், வழக்கமாக மாநில அரசு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை மத்திய அரசிற்கு செல்ல அனுமதி வழங்காததால் மத்திய அரசு தாமாகவே இதனை செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் இதனை அரசு அலுவலர்கள், அரசியல் கட்சியினர் புரிந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

இதில் பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.