கோவையில் கொரோனா சிறப்பு வார்டுகள் தயார் – மாவட்ட கண்காணிப்பு அலுவலர்

கோவையில், கொடிசியா வளாகம், இ.எஸ்.ஐ மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில் கொரோனா சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் உள்ளதாக தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்ட கோவை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தாரேஸ் அகமது கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், கோவை மாவட்டத்தில் ஒமிக்ரான் தொற்று பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும், சிகிச்சை மையங்களில் படுக்கை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் நல்ல முறையில் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும் கொடிசியா வளாகத்தில் மீண்டும் கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறிய அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.

கொடிசியா வளாகம், இ.எஸ்.ஐ மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில் கொரோனா சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் உள்ளன.

கோவை மாவட்டத்தில் ஒமிக்ரான் அலையை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆர்டிபிசிஆர் சோதனையில் சந்தேகத்திற்குரிய மாதிரிகளை நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் வைராலஜியின் பரிசோதனை மையத்துக்கு அனுப்பப்பட்டு ஒமிக்ரான் தொற்றை உறுதி செய்ய முடியும் என தெரிவித்த அவர் சோதனை முடிவுகள் வர கால தாமம் ஏற்பட்டாலும், முடிவுகளுக்காக காத்திருக்காமல் சிகிச்சை அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

ஏற்கனவே ஒமிக்ரான் பரவல் உள்ள நாடுகளில் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் இந்த வைரஸின் வீரியம் குறைவானது என்றாலும் இங்குள்ள மக்கள் தொகைக்கு வைரஸ் பரவல் வீரியம் எப்படி இருக்கும் என்று சொல்ல இயலவில்லை என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கோவையில் புறநகர் பகுதிகளில் 14 இடங்களில் திவிர கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரே மாதிரியான சிகிச்சை கிடைக்க வாய்ப்புகள் கிடைக்கப்படும்.

தொற்று பரவல் வீரியத்தை கருத்தில் கொண்டு கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்து அரசாணை வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.