“வாழ்க்கையில் வெற்றிபெற நல்ல குறிக்கோள் அவசியம்”

டாக்டர். ஆர். வி. கலை அறிவியல் கல்லூரியில் காரமடை ரோட்டரி சங்கம் சார்பில் இரண்டாம் சுழற் சங்க நிறுவல் விழா நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் ராமகிருஷ்ணன் தலைமையேற்றார்.

கல்லூரி முதல்வர் ரூபா முன்னிலை வகித்தார். ஈரோடு மாவட்ட சுழற்சங்கக் குழுவின் தலைவர் சக்தி நல்லசிவம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசிய உரையில், “இன்றைய சமுதாயத்தில் மாணவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொண்டு தனித்துவமாக தலைமைப் பண்பில் சிறந்து விளங்க வேண்டும். வாழ்க்கையில் வெற்றிபெற நல்ல குறிக்கோள் அவசியம். எத்தகைய தடை இருந்தாலும் அந்த குறிக்கோளை நோக்கி முன்னேற வேண்டும்.

கல்லூரி வாழ்க்கையில் நல்ல நண்பர்களை தேர்ந்தெடுத்து அந்த நட்பு வட்டத்தை தனதாக்கிக் கொள்ள வேண்டும். மாணவர்கள் ஒவ்வொருவரும் சுழற்சங்க உறுப்பினராகி சமுதாய முன்னேற்றத்திற்கு பாடுபடவேண்டும்” என்று பல கருத்துக்களை எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வில் சுழற்சங்கத்தின் துணைத் தலைவர் நித்யானந்தன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தனசேகர், மண்டல ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன், மாவட்டப் பிரதிநிதி மொஹம்மது ஆஷிக், சுழற்சங்க உறுப்பினர்கள் ஜெயராஜ், வினோத், பரத்குமார், கிஷோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.