ராமநாதபுரம் அருகே கார் குடோனில் திடீர் தீ விபத்து

கோவை ராமநாதபுரம் அருகே தனியாருக்கு சொந்தமான கார் குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் கரும்புகை ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்தனர்.

கோவை, ராமநாதபுரம் அடுத்த ஸ்ரீபதி நகரில் மார்ட்டின் என்பவருக்குச் சொந்தமான கார் மற்றும் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் குடோன் ஒன்று இயங்கி வருகிறது.

இந்நிலையில் வியாழக்கிமை மதியம் திடீரென குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்கிருந்த ஊழியர்கள் சுதாரிப்பதற்குள் தீ மளமள வென குடோன் முழுவதும் பரவியது. இதனால் வானை முட்டும் அளவுக்கு கரும்புகை வெளியேறி அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளையும் ஆட்கொண்டது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்தனர்.

இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் இரண்டு வாகனங்களில் தீயணைப்பு படை வீரர்கள் அப்பகுதிக்கு சென்றனர்.

குடோனில் பிளாஸ்டிக் பொருட்கள் ஏராளமாக இருந்ததால் தீயைக் கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறினர். இதனை அடுத்து சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த திடீர் தீ விபத்தில் குடோனில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கார்கள் மற்றும் உதிரிபாகங்கள் சாம்பலாகின.

சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள ராமநாதபுரம் போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.