புதுச்சேரி அரசு ஆளுநருக்கு தகவல் கொடுப்பதில் முழு ஒத்துழைப்பு அளிக்கிறது

– ஆளுநர் தமிழிசை

புதுச்சேரி தெலுங்கானா மாநிலங்களில் அரசின் செயல் திட்டங்கள் குறித்த தகவல்களை தான் கேட்டுப் பெற்று வருவதாகவும், அம்மாநில அரசுகள் முழு ஒத்துழைப்புடன் தகவல்களை வழங்கி வருவதாகவும் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு நன்றி தெரிவித்து, அவர்களுடன் கலந்துரையாடிய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், 104 கோடி தடுப்பூசிகளை செலுத்தி இந்திய அரசு சாதனைப் படைத்துள்ளது எனவும், உலக நாடுகள் இந்தியாவைப் பாராட்டி வருகின்றது எனவும் தெரிவித்தார். நெருக்கடியான காலகட்டத்தில் புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு 30% ஆக்சிஜன் தயாரிப்பை வழங்கியதாக கூறிய அவர், தமிழக மக்களுக்கும் புதுச்சேரியில் பாகுபாடின்றி சிகிச்சை அளித்ததாக தெரிவித்தார்.

மாநில அரசின் செயல் திட்டம் குறித்து ஆளுநர் தகவல் கேட்டது தமிழகத்தில் சர்ச்சையாகி உள்ளது. தமிழகத்தில் எல்லாமே அரசியல் ஆக்கப்படுகிறது. தெலுங்கானா மற்றும் புதுச்சேரி அரசுகளிடம் தானும் தகவல்கள் கேட்டு இருப்பதாகக் குறிப்பிட்ட ஆளுநர், அடுத்த மாதம் 11ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் ஆளுநர்கள் மாநாட்டில் மத்திய அரசுக்கு கொடுப்பதற்காக மாநில அரசின் செயல் திட்டங்கள் குறித்த தகவல்கள் பெறப்படுகிறது எனவும் இது எதார்த்தமாக இயல்பாக நடந்தது எனவும் தெரிவித்தார்.

புதுச்சேரியில் வெடிகுண்டு கலாச்சாரம் அதிகரித்திருப்பதாக சொல்வது தவறானது. அங்கு சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கின்றது. ஆளுநர் புதுவையில் நடந்த சில சம்பவங்கள் குறித்து டிஜிபியிடம் அறிக்கை கேட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டார். புதுவை உள்ளாட்சித் தேர்தல் சமூக நீதியுடன் பாதுகாப்பாக நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும், தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கொடுக்காமல் இருக்கும் கட்சிகள் புதுவையில் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என பேசி வருகின்றனர் எனவும் தெரிவித்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், புதுச்சேரி மற்றும் தெலுங்கானா அரசுகள் ஆளுநருக்கு தகவல் கொடுப்பதில் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர் என தெரிவித்தார்.