ஜவுளித்தொழிலுக்கு ஊக்கம்!

தற்போது நடந்து வரும் சட்டசபைக் கூட்டத் தொடரில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பருத்தி மீது விதிக்கப்பட்டு வந்த ஒரு சதவீதம் சந்தை வரியை நீக்குவதாக ஒரு மிக முக்கியமான கொள்கை முடிவை அறிவித்திருக்கிறார். தமிழக ஜவுளித்துறை மேம்பாட்டுக்கு உதவும் வகையில் அமையும் என்று இத்துறை சார்ந்த பலரும் வரவேற்று இருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக இது அந்த துறை சார்ந்தவர்களின் 35 ஆண்டுகால கோரிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் நடைபெறும் துணி வணிகத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு தமிழ்நாடு சார்ந்து நடைபெறுகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் இயங்கிவரும் நூற்பாலைகளின் எண்ணிக்கை சுமார் 1570. இந்த நூற்பாலைகளில் மொத்தம் நூற்கப்படும் நூலின் அளவானது இந்தியாவின் நூற்புத்திறனில் 45% என்பது இங்கு கவனிக்கத்தக்கது. இந்த நிலையில் இங்கு நடைபெறும் ஜவுளித்துறை தொழிலுக்குத் தேவையான பஞ்சின் அளவில் கிட்டத்தட்ட 90%க்கும் மேல் வேறு மாநிலங்களில் இருந்து தான் கொண்டு வரப்படுகிறது.

இவ்வாறு கொண்டு வரப்படும் பஞ்சு மற்றும் கழிவுப் பஞ்சின் விற்பனை மதிப்பு மீது தமிழ்நாடு வேளாண் பொருள்கள் விற்பனை ஒழுங்கு முறைச்சட்டம் 1987 பிரிவு 24ன் படி, 1% சந்தை நுழைவு வரி விதிக்கப்படுகிறது. இந்த சட்டத்தின்படி பருத்தி, பஞ்சு மற்றும கழிவுப் பஞ்சு ஆகியவை வேளாண் பொருட்களாகக் கருதப்பட்டு சந்தைகளில் கொள்முதல் அல்லது விற்பனை செய்யப்படும் போது இந்த வரி விதிக்கப்படுகிறது.

பருத்திப் பொதிகளின் மீது இந்த வரி விதிப்பதில் தவறில்லை. ஆனால் பஞ்சு, மற்றும் கழிவுப் பஞ்சு வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யும்போது வரி விதிக்கப்படுவதால், சிறு, குறு நூற்பாலைகள் பெரிய நெருக்கடியைச் சந்திக்க வேண்டி உள்ளது. எனவே இந்த பஞ்சின் மீது விதிக்கப்படும் நுழைவு வரியை நீக்க வேண்டும் என்பது நெசவாளர்கள் மற்றும் இது சார்ந்த தொழில்முனைவோரின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. ஒன்றல்ல, இரண்டல்ல கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாக இந்த கோரிக்கை அரசாங்கத்திடம் வைக்கப்பட்டு வந்தது இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டு அறிவிப்பு வந்திருக்கிறது. இந்த கூட்டத் தொடரிலேயே உரிய சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.

இது உண்மையிலேயே பாராட்டி வரவேற்க வேண்டிய அறிவிப்பு. ஏனென்றால் இந்தியாவில் உள்ள சிறு, குறு நூற்பாலைகளில் 80% தமிழ்நாட்டில் இயங்கி வருகின்றன. இவை அனைத்துமே பிற மாநிலங்களில் இருந்து வரும் பஞ்சு, மற்றும் கழிவுப் பஞ்சை நம்பித் தான் இயங்கி வருகின்றன. இன்று தொழில் உலகமானது நடப்பு மூலதனம், போக்குவரத்து கட்டணங்கள் என்று விழிபிதுங்கிக் கொண்டு இருக்கும் நிலையில் இந்த ஒரு சதவீத வரி ரத்து என்பது ஓரளவு மூச்சுவிட வைக்கும் என்பது தான் நடைமுறை உண்மை.

ஒரு காலத்தில் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று கோயம்புத்தூர் பகுதியைக் கொண்டாடும் அளவு இருந்த நிலை இன்று தமிழகத்தின் பிற பகுதிகளிலும் ஜவுளித்துறை கால்பதித்து சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் அதற்கு தேவையான வசதிகளைச் செய்து வருவதே பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த உதவும். அதிலும் கோயம்புத்தூர், சோமனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், மதுரை, விருதுநகர் என்று பல பகுதிகளிலும் கைத்தறி, விசைத்தறி மற்றும் ஓபன் எண்ட் நூற்பு இயந்திரங்கள் பெருமளவு இயங்கி வருகின்றன. இவற்றுக்கு இந்த வரி நீக்கம் நல்லதொரு ஊக்கமாக அமையும்.

எல்லாவற்றுக்கும் மேலாக தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிகமான மக்களுக்கு வேலை வாய்ப்பை காலம், காலமாக வழங்கி வரும் தொழிலாக ஜவுளித்துறை இருந்து வருகிறது. கிட்டத்தட்ட லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இது சார்ந்த தொழில்களில் தமிழகம் முழுவதும் ஈடுபடுகிறார்கள். நூறாண்டுகளுக்கும் மேலாக படிப்படியாக வளர்ச்சி பெற்று தொடர்ந்து இயங்கி வரும் இந்த தொழிலுக்கு ஊக்கம் அளிப்பது மிகவும் அவசியம்.

அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கும் அறிவிப்பு பல வகையிலும் பயன் தரக்கூடியது. அரசாங்கம் என்பது நாட்டின் நலனையும் அதில் வாழும் மக்கள் நலனையும் அனுசரித்து அதற்கான கொள்கை முடிவுகளை எடுத்து செயல்படுவதே நீண்ட கால நோக்கில் நன்மை தரும். அந்த வகையில் பதவி ஏற்ற குறுகிய காலத்தில் மக்களின் குறிப்பறிந்து தொழில்துறையின் நாடியை பிடித்துப் பார்ப்பது போல இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. நெசவாளர்கள், சிறு, குறு நூற்பாலைகள் உள்ளிட்ட ஜவுளித்துறை சார்ந்த அனைவரும் இதனை வரவேற்கிறார்கள். நாட்டுக்கு நலமும், வளமும் சேர்க்கும் என்ற வகையில் நாமும் வரவேற்போம்!