உயர்வோம், உயர்த்துவோம்!

கோவையை மையமாக கொண்டு இன்று பெரிய அளவில் வளர்ந்துள்ள பொறியியல் சார்ந்த பெரும்  நிறுவனங்கள் பல இருந்தாலும், பல ஆண்டுகளாய் அனைவரும் வியந்து பார்க்கும் நிறுவனமாக  பிரிக்கால் லிமிடெட்   திகழ்கிறது என்றால், அதற்கு மாற்றுக்கருத்து கிடையாது

ஆட்டோமொபைல் துறைக்கான உதிரி பாகங்களை செய்யும் துறையில் கால்பதித்து 45 வருடங்களைத் தாண்டி இன்று 45 நாடுகளில் தனக்கான இடத்தைப் பெரிதளவில் தக்கவைத்துள்ளது பிரிக்கால்.

‘பையன் பிரிக்கால்  நிறுவனத்தில் வேலைபார்ப்பவராக இருந்தாலே போதும், திருமணத்திற்கு பெண் கேட்டால் உடனே கொடுத்து விடுவார்கள்’ என்று கோவையில் உள்ள பலரும் இந்த  நிறுவனத்தைப் பற்றி சொல்வதை நம்மில் பலரும் கேட்டிருப்போம். அரசுத் துறையில் பணிபுரிபவர்கள் போல் இங்கு பணிபுரிபவர்கள் தங்களின் நிறுவனத்தை அவ்வளவு பெருமையாக சொல்லிக்கொள்வார்கள், இந்நிறுவனம் அத்தகைய சிறப்பை கொண்டதாக இருந்து வருகிறது.

இப்படி ஒரு நிறுவனம் தோன்றக் காரணமாக இருந்தவர் அதன் நிறுவனர் விஜய் மோகன்.  பொறியியல் மாணவராக அவர் கற்ற பாடங்களையும், தொழில்முனைவோராக கடந்து வந்த பாதையையும் இந்த தேசிய பொறியாளர்கள் தினத்தை (செப்டம்பர் 15) முன்னிட்டுக் காண்போம்.

வீடு எனும் பள்ளி, தந்தை எனும் ஆசான்:

கோவையைச் சேர்ந்த டெக்ஸ்டைல் தொழிலில் பெயர்பெற்ற ஒருவரான N.தாமோதரன் அவர்களின் மூன்று மகன்களில் ஒருவர் விஜய் மோகன். பொறியியல் கற்றது கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில், மேற்படிப்புக்காக இண்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங் மற்றும் எம்.பி.ஏ பயின்றது அமெரிக்காவில் உள்ள ஸ்டீவன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில். பொறியியல் துறை பற்றிய அறிவை கல்லூரிகள் வழங்க, வாழ்க்கைக்கு தேவையான வழிகாட்டுதலை இவர் கடந்து வந்த நல்ல மனிதர்கள் வழங்கினர்.

ஆடம்பரத்தின் அருகே மகன்கள் சென்றுவிடாமல்,  உழைப்பின் உன்னதத்தைப் பெற தாமோதரன் வழிசெய்தார். வீட்டில் கார் இருந்த போதிலும் சைக்கிளில் செல்வதில் அடங்கியுள்ள சுதந்திரத்தை தெரியப்படுத்தினார், புத்தக வாசிப்பின் சுவையை உணர்ந்து  சர்வதேச தரம் கொண்ட புத்தகங்களை வாங்கி தந்தார். புழுதி பறக்க விளையாட அனுமதித்த அவர், அழுக்காகிய ஆடைகளையும் அவர்களே துவைக்கவேண்டும் என்று சொல்லி வளர்த்தார். மதிப்பெண்ணின் முக்கியத்துவத்தைவிட நன்மதிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி வளர்த்தார். வீட்டில் உள்ள மூன்று கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பொறுப்பைக் கூட மூன்று மகன்களுக்கும் வழங்கினார்.

இதனால் சிறு வயது முதலே எந்த வேலையும் குறைந்ததல்ல என்ற சிந்தனை விஜய் மோகன் அவர்களின் மனதில் ஆழமாய் பதிந்தது.

ஏன் இதுபோன்ற வாழ்க்கைமுறை பழக்கங்களை பின்பற்றவேண்டும் என்பதைப் பற்றி தன் மகன்களிடம் தெளிவாக எடுத்துக்கூறும் குணம் கொண்ட அவர், தன் மகன்களுக்கு நல்லாசிரியராக இருந்து பல பாடங்களை கற்றுத் தந்துள்ளார்.

படிப்பு பின் பயிற்சி:

தன் தந்தையும் பெரியப்பாவும் இணைந்து பிரீமியர் மில்ஸ் என்ற சிறப்பு பெற்ற மில்லை நடத்தி வந்தபோதிலும், விஜய் மோகன் அவர்கள் பொறியாளராக வர வேண்டும் என விரும்பி பி.இ படித்து முடித்தார்.

மேற்படிப்பிற்கு அமெரிக்கா செல்வதற்கு முன் இயந்திரவியல் துறை சார்ந்த தொழிலில் அனுபவத்தை பெற்றுக்கொள்ள எண்ணி, நேரடி தொழிற்பயிற்சி பெற புகழ் பெற்ற எல்.எம். டபிள்யூ நிறுவனத்தில் அனைத்துத் துறைகளிலும் பணிபுரிந்து அனுபவம் பெற விண்ணப்பித்திருந்தார்.

இந்த நிறுவனத்தில் இணைந்து பணியாற்றிட ஒரு தனிக் காரணம் விஜய் மோகன் அவர்களுக்கு இருந்தது. எல்.எம். டபிள்யூ நிறுவனத்தை நிறுவுவதற்கு முன்னதாகவே அந்நிறுவனத்தின் தலைவர் ஜி.கே.தேவராஜுலு லட்சுமி மில்ஸ் நிறுவனத்தை ஆரம்பித்திருந்தார். மற்றவர்கள் பஞ்சாலைகளுக்கு தேவையான இயந்திரங்களை இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவில் இருந்து அதிகவிலை கொடுத்து இறக்குமதி செய்வார்கள்.

ஜி.கே.தேவராஜுலு அவர்களோ ஜப்பான் நாட்டிலிருந்து அதிக தரம், குறைந்த விலையிலான இயந்திரங்களை இறக்குமதி செய்வார்.  இப்படிப் பட்ட தொலைநோக்கு பார்வைகொண்டவரின் நிறுவனத்தில் வேலை செய்து அனுபவத்தைக் கற்க விரும்பினார் விஜய் மோகன். கேட்டபடியே அந்த வாய்ப்பை வழங்கினார் ஜி.கே.தேவராஜுலு.

தொழிற்சாலை இயங்கும் முறை, இயந்திரங்களின் செயல்பாடு, தொழிலாளர்களின் ஒருங்கிணைந்த உழைப்பு அனைத்தையும் பற்றி விஜய் மோகன் அங்கு பணியாற்றிய படியே அறிந்துகொண்டார். இந்த சிறந்த அனுபவத்தைப் பெற்ற பின் அமெரிக்கா சென்று தனது பொறியியல் மேற்படிப்பை தொடங்கினார்.

தாயகத்தில் தொழில் தொடக்கம்:

விஜய் மோகன் மேற்படிப்பிற்கு அமெரிக்கா செல்லக் காரணமே பின்நாட்களில் கோவையில் சொந்தத் தொழில்  தொடங்க வேண்டும் என்ற கனவிற்காக தான். இந்தியா திரும்பிய பின்னர், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் செய்யும் தொழிலில் உள்ள அருமையான வாய்ப்பை கோவை  எல்.ஜி. நிறுவனத்தின் எல்.ஜி.வரதராஜுலு விஜய் மோகனிடம் தெரிவித்து, அவர் தொழிற்சாலையை தொடங்கும் வரை ஒரு வழிகாட்டியாய் பக்கபலமாக இருந்தார். 1974-ல்  கோவையில் மூன்றாயிரம் சதுரடியில் வெறும் முப்பது பணியாளர்களுடன் தொடங்கப்பட்டது பிரிக்கால் நிறுவனம்.

அவ்வாறு தன் கனவு மெய்ப்பட முதற்கட்டத்தில் தந்தை, பெரியப்பா வி.என்.ராமச்சந்திரன், எல்.ஜி.வரதராஜுலு, ஜி.கே.தேவராஜுலு ஆகியோர் எந்தளவு வழிகாட்டியாக இருந்தார்களோ அதே அளவிற்கு இன்னும் இரண்டு பேர் பிரிக்கால் நிறுவனத்தின் வளர்ச்சிக்குக் காரணமாக இருந்துள்ளனர்.

தொடர்ந்து கற்கும் ஆவல் :

ஜி.கே.தேவராஜுலு-விடம் கிடைத்த அனுபவம், பின்நாட்களில் பிரிக்கால் தொடங்கி, அதற்கு தேவைப்பட்ட  ஸ்விட்சர்லாந்து நாட்டு இயந்திரங்களை வாங்கும் போது விஜய் மோகன் அவர்களுக்கு பெரும் உதவியாக அமைந்தது.  இயந்திரங்களை வாங்கும் முன், அந்த நாட்டில் தங்கி வேலை செய்து, அந்த இயந்திரங்களைப் பற்றி நன்கு அறிந்த பின்னர் தான் அவைகளை இறக்குமதி செய்தார்.

இவ்வாறு தொடக்கத்தில் இருந்தே தான் கற்ற பொறியியல் அறிவு, தொழில்த்துறை அனுபவம் அனைத்தும் பிரிக்காலின்  முதல் அத்தியாயத்தில் மிகவும் கைகொடுத்தது. இத்துடன் நில்லாமல், விஜய் மோகன் அவர்கள் தொடர்ந்து கற்க விருப்பம் காட்டினார். அவர் எங்கு சென்றாலும் அங்குள்ள தொழிற்சாலைகளை பார்வையிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

லூதியானாவில் ஹீரோ மெஜஸ்டிக் நிறுவனத்திற்கான மொபெட் வாகனங்களுக்கு தேவையான உதிரிபாகங்களை பிரிக்கால் தயாரித்து வந்தது. 1979 ல் லூதியானாவிற்கு தொழில் ரீதியாய் சென்றபோது ஹீரோ சைக்கிள் தொழிற்சாலையை பார்வையிட அனுமதி பெற்றிருந்தார். அங்கு உள்ள பல இயந்திரங்கள் சந்தையில் உள்ளவைகளுக்கு சற்று வித்தியாசமானவையாக இருந்தது.  ஹீரோ சைக்கிள் நிறுவனத்தின் தேவைக்கென அவர்களே அந்த இயந்திரங்களை பிரத்தியேகமாய் உருவாக்கியிருந்தனர். இவ்வாறு செய்ததால் இயந்திரத்தின் விலையை குறைக்க முடிந்தது, உற்பத்தியையும் அதிகப்படுத்த முடிந்தது.

இது ஒரு தாக்கத்தை அவர் மேல் ஏற்படுத்த, தன் நிறுவனத்திற்கு வந்துள்ள நபர் யாரென்று ஹீரோ நிறுவனத்தின் தலைவர் பிரிஜ்மோகன் லால் விசாரித்து, தொழிலில் இவ்வளவு ஆர்வமாய் உள்ளார் விஜய் மோகன் என்பதை அறிந்து கொண்ட பின், தொலைபேசி வழியாய் நேரடியாக  அழைத்து  தன் இல்லத்திற்கு விருந்துக்கு வருமாறு கூறினார். தேசிய அளவில் கொடி கட்டிப்பறக்கும் தொழிலதிபர் தன்னை அழைத்து, உபசரித்து, தன் அனுபவங்களை பகிர்ந்த அந்த தருணம் மிகவும் ஊக்கமாய் விஜய் மோகன் அவர்களுக்கு அமைந்தது. அந்த சந்திப்பிற்கு பின் பிரிக்கால் நிறுவனத்திற்கு தேவையான இயந்திரங்களை முடிந்தவரை  தாமே உருவாக்கிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டார்.

இவர் போல்,  டி.வி.எஸ் குழுமத்தைச் சேர்ந்த சுரேஷ் கிருஷ்ணா அவர்களும் தனக்கு ஒரு நல்ல வழிகாட்டியாய் இருந்துள்ளார் என்று குறிப்பிடுகிறார் விஜய் மோகன். தொழிலாளர்கள் தான் தொழிற்சாலையின் அச்சாணி என்பதை உணர்ந்தவர் சுரேஷ் கிருஷ்ணா. அனைத்து பணியாளர்களுடன் நேரடியாக உரையாடுவார், தன் கருத்துகளை அவர்களிடம் பகிர்ந்து கொள்வார். இவ்வாறு பழகுவதால்  ஊழியர்களின் தேவைகளை நேரடியாக அவரால் புரிந்து கொள்ளமுடிந்தது.

இதே போல் விஜய் மோகன் அவர்கள், தன் மேலாளர்களை தன் அறைக்கு அழைக்காமல், அவர்கள் உள்ள இடத்திற்கே நேரில் செல்வதை வழக்கமாக  கடைபிடித்தார். இப்படி அவர்கள் உள்ள இடத்திற்கு செல்வதால் அவர்கள் தேவைகளை நேரில் தெரிந்து அதற்கு தீர்வளிக்க முடிந்ததாய் பதிவிடுகிறார்.

இப்படி பலரின் வழிகாட்டுதலும், அவர்கள் வழங்கிய பாடமும் பொறியாளராக இருந்த  விஜய் மோகனை ஒரு சிறந்த தொழில் முனைவோராக உருவெடுக்க வலுசேர்த்தது. நம்பிக்கையான நிர்வாகிகள், சுறுசுறுப்பான தொழிலாளர்கள் இவரின் தலைமைக்கு பக்கபலமாக இருந்தனர்.   1978-ல்  ஏற்றுமதியில் கவனத்தைச் செலுத்த முற்பட்டு, ஐரோப்பாவில் ஒரு மாதம் சுற்றுப்பயணத்தில் இருந்தார். அப்போது தொலைத்தொடர்பு வசதிகள் இல்லாத காலம். இருப்பினும் நிர்வாக பொறுப்பில் உள்ளவர்களும், தொழிலாளர்களும் சிறப்பாக செயல்பட்டு விஜய் மோகன் அவர்களுக்கு நம்பிக்கை தந்தனர்.

அதன் பின் இந்திய சந்தையில் பிரிக்கால் நிறுவனத்தின் பொருட்களுக்கு அமோக வரவேற்பு கிடைக்க, வெளி நாடுகளிலும் தனெக்கென தனி இடத்தை உருவாக்கியது பிரிக்கால்.  1974 முதல்  நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உழைத்து, அதை பன்னாட்டு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் நாடும் நம்பிக்கை மிகுந்த நிறுவனமாக உயர்த்தி, 5000 க்கும் மேற்பட்ட ஊழியர்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை கொண்டுவந்து, 2012ல் தன் 65-வது வயதில் ஒய்வு பெற்றார் விஜய் மோகன்.

உற்பத்தி செய்யும் பொருட்களின் தரம், அதற்குரிய விலை, குறித்த நேரத்தில் டெலிவரி, சிக்கல் ஏற்படும் போது உடனடி சர்விஸ் இவை நான்கும் தொழில் செய்து முன்னேற அவசியமானவை. அதே போல் முதலீடு செய்தவர்கள், பணியாளர்கள், வாடிக்கையாளர்கள், சப்ளையர்கள் ஆகிய நால்வர் இல்லாமல் ஒரு தொழில் சிறப்பாக நடைபெறவே முடியாது என்கிறார். இவர் சொல்வது பொறியியல் துறை  தாண்டி அனைத்து துறைகளுக்குமே நிச்சயம் பொருந்தும் என்பதில் இருவேறு கருத்துகள் கிடையாது.

சிறந்த பொறியாளருக்கான குணங்கள்

பொதுவாக இன்ஜினீயர் என்றவுடன், மெக்கானிக்கல் இன்ஜினீயர், சிவில் இன்ஜினீயர், எலக்ட்ரிகல் இன்ஜினீயர் என்று வழக்கமாக பார்க்கப்படும் நபர்களைத் தான் நினைவு கூருவோம். ஆனால் என் பார்வையில் சத்தத்தை நெறிப்படுத்தி இசையாய் மாற்றி அதை தொகுத்து  நமக்கு வழங்கும் ஒரு இசை அமைப்பாளரும் ஓசை இன்ஜினீயர் தான், நம் உடலுறுப்புகளின் பிரச்சனைகளை நிவர்த்தியாக்கும் அறுவை சிகிச்சை நிபுணரும் மனித இன்ஜினீயர் தான். இந்த துறை விசாலமானது.

இந்த இன்ஜினியரிங் துறையில் வெற்றி பெறவேண்டும் என்றால்  அந்த துறையில் முயலும் நபர் ஆர்வம் கொண்டவராக இருக்க வேண்டும் (Inquisitiveness). தான் கற்றது கையளவு என்பதை உணர்ந்து புதியவற்றை கற்றுக்கொள்ளும் ஆவல், உத்வேகம் இருக்கவேண்டும் (Continuous Learning). அத்துடன் துறையில் பகுப்பாய்வு செய்து  சிந்திக்கக்கூடிய நபராகவும் (Analytical Thinking), பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கக் கூடியவராகவும் இருக்கவேண்டும் (Problem Solver).

இன்றைய சவால் நிறைந்த  சூழ்நிலையில் ‘ஒரு பொறியாளர் தன்னுடைய முயற்சியினால் மட்டுமே வெற்றியாளராக முடியுமா?’ என்றால், என்னைப் பொறுத்தவரை அதற்கு சாத்தியமில்லை என்றே சொல்லுவேன். இன்றைய நவீன உலகில் தனி நபராக வெற்றிபெறுவது மிகக் கடினம். எனவே ஒரு நல்ல குழுவின் அங்கமாக இருக்கவேண்டும், இல்லையென்றால் நல்ல குழுவை தங்களுக்கென உருவாக்கிட வேண்டும்.

இதுமட்டும் போதுமா என்றால், இதோடு மக்களுடன் நன்கு அணுகும் திறன் வேண்டும் (Interpersonal Skills). அப்போது தான் அவர்கள் உங்களை ஏற்றுக்கொள்வார்கள். நீங்கள் நிச்சயமாக பேச்சு திறனை வளர்த்துக் கொள்ளவேண்டும் (Communication Skills). நீங்கள் சொல்வதை அனைவரும் எளிதில்  துல்லியமாக புரிந்துகொள்ளும்படி உங்கள் பேச்சு இருக்கவேண்டும்.

அதே போல், நீங்கள் ஒரு நல்ல தொழில்முனைவோராகத் திகழவேண்டும் என்றால், துணிச்சலோடு சவால்களை எதிர்கொள்ள பழகிக் கொள்ளவேண்டும் (Risk Taking).  தோல்வியடைந்தால் அதிலிருந்து  பாடத்தை கற்கவேண்டும், தோல்வி நிலையிலிருந்து மீண்டு வெற்றியை நோக்கி நகர முயல வேண்டும்.