ஓய்வு பெற்ற ஆசிரியர்களை கொண்டு தரமான வினா வங்கி புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது

அமைச்சர் அரசு பள்ளியில் பேச்சு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி கோவை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கடந்த 22 ஆண்டுகளாக வினா வங்கி புத்தகங்களை வழங்கி வருவதாக அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்தார்.

கோவை ஆர்.எஸ் புரம் பகுதியில் உள்ள அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரசு பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பில் பயிலும் 407 மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினார். தொடர்ந்து கோவை மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகள் பொதுத்தேர்வை எதிர்கொள்ள ஏதுவாக வினா வங்கி புத்தகங்களை தன் சொந்த நிதியில் இருந்து 1195 பேருக்கு இலவசமாக வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், கடந்த 22 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி கோவை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு வினா வங்கி புத்தகங்களை வழங்கி வருவதாகவும், மாணவர்கள் தேர்வை எதிர்கொள்ள இப்புத்தகங்கள் உதவிகரமாக இருக்கும் எனவும் தெரிவித்தார். மேலும், ஓய்வு பெற்ற ஆசிரியர்களை கொண்டு தரமான வினா வங்கி புத்தகங்கள் தயாரிக்கப் பட்டுள்ளதாகவும், 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் பெரும்பாலான வினாக்கள் வினா வங்கிப் புத்தகத்தில் இருந்து கேட்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.