திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் அனைத்து ஹோட்டல் உரிமையாளர்களுடன் திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று 27.10.2020 நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் தெரிவித்ததாவது, கோவை,  மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016-ன்படி தினசரி 100 கிலோ எடைக்கு மேலான திடக்கழிவுகளை உற்பத்தி செய்யும் ஹோட்டல் மற்றும் வணிக நிறுவனங்கள் அவர்களாகவே திடக்கழிவுகளை மேலாண்மை செய்ய வேண்டும். மாநகராட்சியிடம் வழங்கக் கூடாது.

இது தொடர்பான அறிவியல் சார்ந்த உத்திகளை மாநகராட்சி வழங்கும். அனைத்து ஹோட்டல் மற்றும் வணிக நிறுவனங்களிலும் கருப்பு கலர் பாலித்தீன் கவர்களை உபயோகிக்கக்காமல், மக்கும், மக்கா குப்பைகளை தனித்தனியாக பெட்டிகளில் சேகரித்து மாநகராட்சி வண்டிகளில் ஒப்படைக்க வேண்டும். குப்பைக் கழிவுகளை குப்பைத்தொட்டியிலோ அல்லது வெளியிலோ கொட்டுவதை சுகாதார ஆய்வாளர்கள் மூலம் கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும். மேலும், மக்கும், மக்கா குப்பைகளை தரம் பிரித்து தனித்தனியாக வழங்கப்பட வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து அனைத்து மண்டல சுகாதார அலுவலர்களுடன் மாநகராட்சியில் நடைபெற்றுவரும் தூய்மை பணிகள் மற்றும் திடக்கழிவு மேலாண்மை பணிகள், நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையங்கள் குறித்து மண்டல வாரியாக மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார்.