கோவையில் 20 ஆயிரத்து 839 ஆக உயர்ந்த கொரோனா பாதிப்பு

கோவையில் அரசு மருத்துவமனையை சேர்ந்த பயிற்சி மருத்துவர் உள்பட 440 பேருக்கு இன்று கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 839 ஆக உயர்ந்துள்ளது.

கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் காய்ச்சல் வார்டில் பணியாற்றி வருபவர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு நாள்தோறும் உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில் இன்றும் 25 வயது ஆண் பயிற்சி மருத்துவர், 19 வயது செவிலியர் பயிற்சிப் பள்ளி மாணவிகள் இருவருக்கும் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் பி.ஆர்.எஸ். காவலர் குடியிருப்பை சேர்ந்த 48 வயது ஆண் காவலருக்கும், ஆடிஸ் வீதி காவலர் குடியிருப்பை சேர்ந்த 48 வயது பெண் காவலருக்கும் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தவிர சூலூரில் 33 பேர், துடியலூரில் 23 பேர், வெள்ளக்கிணர், பீளமேட்டில் தலா 16 பேர், மேட்டுப்பாளையத்தில் 13 பேர், காரமடையில் 10 பேர், கணபதி, வடவள்ளியில் தலா 9 பேர், பொள்ளாச்சி, மதுக்கரையில் தலா 7 பேர் உள்பட 440 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவையில் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 545 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 16 ஆயிரத்து 709 பேர் குணமடைந்துள்ளனர்.
தற்போது 3 ஆயிரத்து 790 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.