பால் கல்யாண் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம்

பால் சக்தி புரஸ்கார் விருது மற்றும் பால் கல்யாண் புரஸ்கார் விருது பெற தகுதியானவர்கள் இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, மத்திய அரசின் தேசிய குழந்தைகள் விருது 2020-க்கு (தற்போது பெயர் மாற்றம் செய்யப்பட்டது) பால் சக்தி புரஸ்கார் விருது மற்றும் பால் கல்யாண் புரஸ்கார் விருது என இரு பிரிவிற்கு வழங்கப்படுகிறது.

பால் சக்தி புரஸ்கார் விருதானது குழந்தைகள் தங்களின் தனித்துவமிக்க செயலாற்றலால் கீழ்கண்ட துறைகளில் விளையாட்டு, கலை, வீரம், கலாச்சாரம், சமூகசேவை, கல்வியியல் போன்ற துறைகளில் சாதனை படைத்தற்காக பதக்கம், சான்றிதழ் மற்றும் ரூ.1,00,000 பரிசுத் தொகை வழங்கி ஊக்குவிக்கப்படுகிறது.

பால் கல்யாண் புரஸ்கார் விருதானது குழந்தைகள் முன்னேற்றம், பாதுகாப்பு நல்வாழ்வு போன்ற துறைகளில் சிறந்த பங்களிப்பு அளித்த நிறுவனங்கள் மற்றும் தனிநபர் பிரிவிற்கு வழங்கப்படுகிறது. இதில் தனிநபர் பிரிவிற்கு ரூ.1,00,000 பரிசுத்தொகை, பதக்கம் மற்றும் சான்றிதழும், நிறுவனம் பிரிவிற்கு ரூ.5,00,000  பரிசுத்தொகை, பதக்கம் மற்றும் சான்றிதழும் வழங்கி ஊக்குவிக்கப்படுகிறது.

மேலும், இவ்விரண்டு விருதிற்கும் www.nca-wcd.nic.in என்ற இணையதளத்தில் 15.09.2020 வரை மட்டுமே விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்படும். பிற முறைகளில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மற்றும் இறுதி நாளுக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.