கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்து பணிக்கு திரும்பினார் ஆட்சியர்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் போர்கால நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில் கோவை மாவட்ட ஆட்சியராக உள்ள ராசாமணியின் பங்கு குறிப்பிடத்தக்க வகையில் இருந்து வருகிறது.

தினமும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடனான ஆலோசனை, கட்டுப்பாட்டு மண்டலங்களை நேரில் சென்று பார்வையிடுதல், கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மதிக்காதவர்கள் மீது அதிரடியாக நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் ராசமணிக்கு கடந்த ஜூலை 15 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில்  சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய மாவட்ட ஆட்சியர் ராசாமணி வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். இந்நிலையில் 26 நாட்களுக்கு பின் மீண்டும் இன்று (10.8.2020) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து தன் பணியை துவங்கினார். சுமார் 25 நாட்களுக்கு பிறகு ஆட்சியர் ராசாமணி அவரது அலுவலகத்திற்கு வந்திருப்பது  குறிப்பிடத்தக்கது.

மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் மாவட்ட வருவாய் அலுவலர், ஊரக வளர்ச்சி துறையில் திட்ட இயக்குனர் மற்றும் உயர் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.