ரஷ்யாவில் உயிரிழந்த தமிழர்களின் உடல்களை இந்தியாவுக்கு கொண்டு வர உதவுங்கள் !

– வானதி சீனிவாசன்

ரஷியாவில் மருத்துவ படிப்பு படித்துவந்த தமிழகத்தை சேர்ந்த 4 மாணவர்களான ஆசிப், விக்னேஷ், ஸ்டீபன், மனோஜ் ஆகியோர் ஆகஸ்ட் 9 ஆம் தேதி அந்த நாட்டில் உள்ள ஆற்றில் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

ரஷியாவில் உள்ள வோல்கிராட் மாநில மருத்துவ பல்கலைக்கழகத்தில் இந்த 4 மாணவர்களையும் சேர்த்து மொத்தம் பத்து மாணவர்கள்  ஆகஸ்ட் 9 ஆம் தேதி, வோல்கா நதிக்கு வார இறுதியை  கழிக்க சென்றுள்ளனர். விளையாட  ஆற்றில் இறங்கிய மாணவர்கள் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிக்கொண்டனர். மற்ற  6 மாணவர்கள் மீண்ட நிலையில், இந்த  4 பேர் பரிதாபமாய் உயிரிழந்தனர்.

ஆசிக் தாராபுரத்தையும், மனோஜ் சேலத்தையும், ஸ்டீபன் சென்னையையும் மற்றும் விக்னேஷ் கடலூர் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள்.

இறந்த மாணவர் மனோஜின் தந்தை ஆனந்த், தமிழக முதல்வரிடம் மாணவர்களின் உடல்களை தமிழகத்திற்கு கொண்டுவர வேண்டும் என வேண்டினார். முதல்வர், தேவையான அனைத்து ஆதரவையும் மத்திய அரசு  மூலம் செய்யப்படும் என  உறுதிப்படுத்தியுள்ளார்

இறந்தவர்களின் உடல்களை இந்த கொரோனா காலத்தில் தமிழகத்திற்கு கொண்டு வருவது சிரமமானது. இதனால் அவர்களது உடல்களை தமிழகத்திற்கு கொண்டுவர உதவவேண்டும் என்று பாஜக மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் அவரது ட்விட்டர், பக்கத்தில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரிடம்  கேட்டுக்கொண்டுள்ளார்.