கிரெடாயின் சார்பில் தமிழக முதல்வரிடம் மனு

மாறி வரும் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யவும், ரியல் எஸ்டேட் துறைக்கு ஒரு ஊக்கமளிக்கவும், நெருக்கடியான சூழ்நிலையிலும், அதிக வேலை வாய்ப்பை அளித்து வரும் கட்டுமான தொழிலை ஊக்குவிக்க தமிழக அரசு சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என கிரெடாய் கோவை கிளை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மனு அளித்துள்ளது.

இதுகுறித்து கோவை கிரெடாய் அமைப்பின் தலைவர் சுரேந்தர் விட்டல் அவர்கள் கூறுகையில் கோவிட் 19 சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இந்த கீழ்க்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றார் அவை

1. மனை மற்றும் கட்டிட அங்கீகாரம் அளிக்க காலக் கெடு நிர்ணயிக்க வேண்டும். தற்போது மனை மற்றும் கட்டிட அங்கீகாரம் பெற குறைந்தபட்சம் 6 மாதங்கள் முதல் ஓராண்டாகிறது. குறிப்பிட்ட காலக்கெடுவில் ஒரே முறையில் தேவையான அனைத்து விசாரணையை மேற்கொண்டு, அரசு அங்கீகாரம் வழங்க வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இது நடத்தப்படவில்லை என்றால், அங்கீகாரம் அளிக்கப்பட்டதாக கருதப்பட வேண்டும்.

2. தற்போதுள்ள 15,000 சதுர அடிக்கு மேலுள்ள அனைத்து கட்டிடங்களின் அங்கீகாரத்திற்கு கோப்புகள் சென்னை டிடிசிபி (DTCP) அலுவலத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் பயணங்களை தவிர்க்கவும், நோய் தொற்றிலிருந்து காக்கவும் 2 லட்சம் சதுரடி வரையிலான கட்டுமானங்களுக்கான அங்கீகாரத்தை கோவை உள்ளூர் திட்ட குழுமத்திலேயே அளிக்க அனுமதி வழங்க வேண்டும்.

3. தற்போது உள்ளூர் பஞ்சாயத்துகளின் தடையில்லா சான்று கட்டிட அங்கீகாரத்திற்கு பெற வேண்டியுள்ளது. இது, பல்வேறு முறைகேடுகளுக்கு வழி வகுக்கிறது. வாடிக்கையாளர் நலன் கருதி, ஒற்றை சாளர ஆன்லைன் முறையில் அங்கீகாரம் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் உள்ளூர் திட்டக் குழுமம், DTCP, மாநகராட்சி, மத்திய மற்றும் மாநில அரசுகளின் துறைகள் இணைக்கப்பட வேண்டும். தற்பொழுது ஒவ்வொரு துறையிலும் அங்கீகாரத்திற்கு அதிக நேரம் ஆவதால் கட்டிடத் துறையின் செலவுகளும் கூடுகிறது. ஆன்லைன் மூலம் ஒரு வெளிப்படையான அங்கீகார செயல்முறையை கொண்டு வருவதற்கு கிரடாய் அமைப்பு முழு ஒத்துழைப்பு அளிக்கும்.

4. சென்னை பெருநகர் திட்ட குழுமம் போன்று, ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் ஒரு அலுவலகத்தை அமைக்க வேண்டும். இதனால், அதிகாரம் பரவலாக்கப்பட்டு, அங்கீகாரம் எளிதாக கிடைக்கும். ஒவ்வொரு அங்கீகாரத்திற்கும் பொது மக்கள் சென்னைக்கு அலைய வேண்டிய அவசியம் இருக்காது.

5. தற்போதுள்ள அங்கீகார கட்டணத்தை, 2018 ல் இருந்த கட்டண அளவிற்கு குறைக்க வேண்டும். ஷெல்டர் கட்டணம் போன்ற இதர கட்டணங்களை நீக்கினால் அங்கீகாரம் பெறுவதற்கான செலவு குறையும். மேலும் தற்பொழுது 5 ஆண்டு அங்கீகாரத்திற்கு வசூலிக்கப்படும் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதை முந்தைய அளவிற்கே குறைக்க வேண்டும்.

6. பல்வேறு மாநிலங்களில் உள்ளது போன்று பத்திர பதிவு கட்டணத்தை 6 சதவீதமாக குறைக்க வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொலைநோக்கு திட்டமான பெண்களின் முன்னேற்றத்தை நிறைவேற்றும் விதமாக, மகளிர் பெயரில் செய்யப்படும் பத்திரப் பதிவுக்கு மேலும் 1 சதவீதம் குறைவான கட்டணத்தை வசூலிக்க வேண்டும்.

7. வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டதால், கட்டுமான வேலைகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை பெருமளவில் ஏற்பட்டுள்ளது. கிரெடாய் அமைப்பைச் சேர்ந்த நிறுவனங்கள் தமிழகத்தில் உள்ளவர்களை பணியில் அமர்த்த விரும்புகிறது. எனவே, மாநில அளவில் வேலையில்லா பணியாளர்களை தமிழ்நாடு சமூக நல பாதுகாப்பு துறையின் மூலம் கணக்கீடு செய்து, அவர்களுக்கு கட்டிடத் துறையில் வேலை வாய்ப்பு வழங்கலாம்.

8. அங்கீகாரம் கேட்டு விண்ணப்பித்துள்ள அனைத்து கோப்புகளையும் உடனடியாக ஒப்புதல் அளித்து விரைவாக வழங்க வேண்டும். வெளிமாநில தொழிலாளர்கள் சென்று விட்டதால், திட்டங்களை முடிக்க அதிக நாட்கள் தேவை. எனவே, அங்கீகாரம் அளிக்கப்பட்ட திட்ட கால அளவை மேலும் ஓராண்டு காலம் நீட்டிக்க வேண்டும். இதனால், RERA அமைப்பிடமிருந்தும் கூடுதல் புதுப்பிக்கப்படும் கட்டணத்திலிருந்தும் சலுகை கிடைக்கும்.

9. தற்பொழுது கோவை மாநகராட்சியிலும் உள்ளூர் திட்டக் குழுமத்திலும் அங்கீகாரத்திற்கும் வெவ்வேறு மென்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் பொது மக்களுக்கும் கட்டிட நிறுவனங்களுக்கும் அதிக சிரமம் ஏற்படுகிறது. எனவே, உள்ளூர் திட்டக் குழுமம் பயன்படுத்தும் மென்பொருளையே கோவை மாநகராட்சியும் உபயோகப் படுத்த வேண்டும்.

10. சரியாக கட்டிடங்கள் கட்டி முடித்து பணி முடிப்பு சான்றிதழ் பெற்ற பின்பும் முன் வைப்பு தொகை அரசால் திருப்பி வழங்கப்படுவதில்லை. எனவே இந்த முன் வைப்புத் தொகையை ரத்து செய்ய வேண்டும்.

11. கட்டிட பணி முடிந்த பிறகு உள்ளூர் திட்டக் குழுமம் அனைத்து ஆய்வுகளும் செய்த பிறகுதான் கட்டிட பணி முடிப்புச் சான்றிதழை அளிக்கிறது. எனவே இந்த சான்றிதழ் பெற்ற பின் சேவை இணைப்புகளுக்கான மின்சாரம், தண்ணீர், சாக்கடை மற்றும் தீயணைப்புத் துறை உள்ளிட்ட துறைகள் செய்யும் ஆய்வுகளை தவிர்க்க வேண்டும். இதனால், கட்டிடங்களை வாடிக்கையாளர்களுக்கு ஒப்படைப்பதில் ஏற்படும் காலதாமதங்களைத் தவிர்க்கலாம்.

12. கட்டுமானத்தின் போது அங்கீகாரத்திற்கு மாறாக கட்டப்படும் கட்டிடங்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். பல சமயங்களில் அத்தகைய விதி மீறிய கட்டிடங்களுக்கும் மின்சாரம் மற்றும் தண்ணீர் இணைப்புகள் வழங்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.

13. பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தொய்வு நிலையால், பல வாடகைதாரர், வாடகை தர மறுத்து வருகின்றனர். எனவே, அடுத்த ஒரு ஆண்டுக்காவது சொத்து வரியை உயர்த்தக்கூடாது. மேலும், ஏப்ரல் முதல் டிசம்பர் வரைக்கான சொத்து வரிக்கு விலக்கு அளிக்க வேண்டும்.

14. கோவை மாநகரின் புதுப்பிக்கப்பட்ட மாஸ்டர் பிளானுக்கு பல காலமாக கோரிக்கை உள்ளது. இத்தகைய புதுப்பிக்கப்பட்ட மாஸ்டர் பிளான் இல்லாததால் பல திட்டங்கள் அமல்படுத்தப்படவில்லை. இதனால் பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. மாஸ்டர் பிளான் திட்டத்தை மேம்படுத்தி உடனடியாக கோவையின் அடிப்படை கட்டமைப்பு, மேம்பாட்டு திட்டங்களை மேற்கொள்ள வழிவகுக்க வேண்டும். என்று மனுவில் குறிப்பிட்டிருந்தது.