குறுந் தொழில் வளர்ச்சி மேம்பாட்டுக்கு உதவும் அரசுக்கு நன்றி

தமிழகத்தின் தொழில் வளர்ச்சி மானிய தொகை பெற்ற பிரவீன் என்பவர் அரசுக்கு நன்றி தெரிவித்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் தொழில்துறையினை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் கோவை மாவட்டம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அதேபோல் தொழில் முனைவோர்களின் விருப்பத்திற்குரிய மாநிலமாகவும், குறுந்தொழில் மையமாகவும் திகழ்கிறது.

கோவை மாவட்டத்தில், மாவட்ட தொழில் மையம் மூலமாக, படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு திறன்களுக்கு ஏற்றவாறு சுய தொழில் துவங்க குறைந்தது, 25 சதவீதம் அரசு மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வழங்க வகையுள்ள திட்டங்களான UYEGP, PMEGP மற்றும் NEEDS ஆகிய திட்டங்களின் மூலமாக ஆண்டுதோறும் சராசரியாக 500-க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர்.

இத்திட்டத்தில் விண்ணப்பிப்பவர்கள் குறைந்த பட்சம் 21 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிக பட்ச வயது பொதுப் பிரிவினருக்கு 35 வயதாகவும், சிறப்பு பிரிவினருக்கு (மகளிர் ஆதிதிராவிடர் பழங்குடியினர் பிற்பட்ட வகுப்பினர் மிகவும் பிற்பட்ட வகுப்பினர் சிறுபான்மையினர் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் இராணுவத்தினர், திருநங்கைகள்) அதிகபட்ச 45 வயதாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் தமிழக அரசின் மானியத் தொகை பெற்ற பிரவீன் என்பவர் அரசுக்கு நன்றி கூறி பேசுகையில், நான் அன்னூரில் வசித்து வருகிறேன். நான் பட்டப்படிப்பு படித்துள்ளேன். எனக்கு புதியதாக தொழில் துவங்க ஆசை இருந்தது. ஆனால் எனக்கு அதற்கான பொருளாதாரம் வசதி இல்லை. இந்நிலையில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில்நிறுவன மேம்பாட்டு திட்டம் பற்றி மாவட்ட தொழில் மையம் மூலமாக அறிந்து கொண்டேன். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பத்திருந்தேன். ஜாக்ஹம்மர் மற்றும் அதன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழில் நிறுவனத்தை ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் அன்னூரில் தொடங்கினேன்.

இதற்கு தமிழக அரசின் சார்பில் மானியத் தொகையாக ரூ.8.80 லட்சம் வழங்கப்பட்டது. என் போன்ற படித்த இளைஞர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி அளித்து, நிதிநிறுவனங்கள் மூலமாக கடன் வழங்கி புதிய உற்பத்தி சேவை தொழில்களை தொடங்க உருவாக்கப்பட்ட இத்திட்டத்தினை தந்த  தமிழ்நாடு முதலமைச்சர் என் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.