இணையவழியில் இலவச கல்விக் கரங்கள்

கல்வி ஆதிகாலம் முதல் அதிநவீன காலம் வரை அழியாத ஒரு வரமாக உள்ளது. இது பலருக்கு வரமாக இருந்தாலும் அது நம் சமூகத்தின் நடுத்தர மற்றும் கீழ் நடுத்தர குடும்பப் பின்னணியில் உள்ள மாணவர்களுக்குக் கிடைப்பதில்லை.

இந்த இடைவெளியை போக்க வேண்டும் என்று நினைத்த அமெரிக்காவில் வாழும் இந்தியக் குடும்பத்தைச் சேர்ந்த பள்ளி மாணவரான ஆதித்யா கொரானா விடுமுறை காலங்களை பயனுள்ளதாக ஆக்க  அமெரிக்காவில் உள்ள சில ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக டியூஷன் எடுத்துள்ளார்.

அதில் உற்சாகத்துடன் செயல்பட்டு வந்த ஆதித்யாவுக்கு அவரது அம்மா காயத்ரியின் அறிவுரையின் படி  இந்தியாவில் இவரது பணி ஆதித்யா தன் நண்பர்கள் நிகில் தேவராஜ் மற்றும் அனிருத்துடன் இணைந்து எஜூகேஷனிஸ்ட் டியூடரிங் சர்வீஸைக் கடந்த மே மாதத்தில் துவங்கியுள்ளார்.

இந்த சேவையை ஒரு அரசு சாரா லாப நோக்கற்ற அமைப்பாக உருவாக்கி இலவசமாக ஆன்லைன் வழியாக டியூஷன் சேவை வழங்கி வருகிறார்கள். தற்போது இந்தியாவில் 6 முதல் 13 வயது உள்ள மாணவர்களுக்குப் (ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயில்பவர்கள்) பாடங்களை எடுக்கிறார்கள். வகுப்புகள் அமெரிக்கக் கல்விமுறையின் உயர்தரத்தில் அடிப்படைகளைத் துல்லியமாக விளக்கும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பத்தில் ஆதித்யா, நிகில், அனிருத் ஆகியோர் மட்டும் பாடங்களை எடுத்துள்ளார்கள். இவர்களால் ஊக்கம் பெற்ற பல மாணவர்கள் இணைந்தனர். தற்போது அமெரிக்காவில் வசிக்கும் தமிழ்நாடு, கேரளா மற்றும் வட இந்தியாவைச் சேர்ந்த பல மாணவர்களும் தன்னார்வலர்களாக இவர்களுடன் இணைந்து ஆன்லைனில் இந்திய மாணவர்களுக்கு டியூஷன் எடுக்கின்றனர்.

அமெரிக்காவில் இருந்து மட்டுமல்லாமல் தற்போது மும்பை மற்றும் தமிழகத்தில் இருந்தும் தன்னார்வலர்கள் இணைந்துள்ளனர். ஆதித்யா துவங்கியது இப்போது பெரும் இயக்கமாக மாறிவிட்டது. இவர் பத்தாம் வகுப்பு படிப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் மூலம் ஆங்கிலம், அறிவியல், கணிதம், அடிப்படை கம்ப்யூட்டர் கோடிங், செஸ் விளையாட்டு ஆகியவற்றுக்குப் பாடம் சொல்லித்தரப்படுகிறது. மாணவர்களுக்குப் புரியும் வரையில் ஒவ்வொரு கான்செப்ட்டும் பொறுமையாகவும், உற்சாகத்துடனும் எடுக்கப்படுகிறது. ஒவ்வொரு வகுப்பும் 35 நிமிடங்கள் வரை இருக்கும். ஊரடங்கில் பள்ளிக்குச் செல்ல முடியாமல் முடங்கிக் கிடக்கும் எண்ணற்ற ஏழை எளிய மாணவர்கள் தங்கள் அமெரிக்க நண்பர்களின் உதவியால் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் கல்வியைத் தொடர்கிறார்கள்.

இந்தச் சேவை குறித்து ஆதித்யா கூறுகையில், அடிப்படைக் கல்விக்கான அஸ்திவாரம் ஆழமாகப் போடப்பட்டால் படிப்பில் மாணவர்கள் ஆர்வத்துடன் படிப்பார்கள். எனக்கு கிடைத்த தரமான கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடனே இந்தச் சேவையைத் துவங்கினேன். எங்களுடன் இணைந்து தன்னார்வலர்களாகப் பங்காற்ற ஆர்வமுடையவர்களை வரவேற்கிறோம். அதற்கு எங்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து தங்களை இணைத்துக் கொள்ளலாம் என்று கூறினார். தொடர்புக்கு httpseducationisttutoring.org, educationisttutoring@gmail.com