இலவச மின்சாரத்தை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற விவசாயிகள் கோரிக்கை

இலவச மின்சாரத்தை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ரத்தினசாமி, பொருளாளர் லோகநாதன் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் கே.சி. ரத்தினசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மத்திய அரசு சட்டத்திருத்த மசோதாவை கைவிட வேண்டும் என்றும் மின்சாரத்தை பொது பட்டியலில் இருந்த மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

மேலும், மின்சார சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என்றும், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 2 மாதங்களில் 3 லட்சம் கையெழுத்து இயக்கம் நடத்தி மத்திய அரசுக்கு அனுப்ப உள்ளதாக தெரிவித்தார்.

ஈரோட்டில் கடந்த வாரம் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டு, இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் கையெழுத்துகள் பெறப்பட்டுள்ளன. இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவிற்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் என்றார். இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட மாட்டாது என கூறும் பாஜக அரசு மாநில அரசிற்கு ஏன் அழுத்தம் தர வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.

அதேபோல, ஆந்திரா, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநில முதல்வர்கள் மத்திய அரசின் வழித்தடத்தை நிறுத்தி விடுவோம் என கர்ஜிக்கின்றனர். இதில் அதிகம் பாதிக்கப்படுவது தமிழகம் தான் எனவும் கூறினார்.

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இலவச மின் இணைப்பு கேட்டு முன்பதிவு செய்து காத்திருக்கும் அனைவருக்கும் மின் இணைப்புகள் வழங்கிட வேண்டும், கைத்தறி விசைத்தறி மற்றும் வீடுகளுக்கு சலுகை கட்டண மின்சாரம் தொடர வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும், விவசாய சங்கங்களில் சிலர் சுய லாபங்களுக்காக தவறான பிரச்சாரங்களை செய்து வருவதாகவும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் ரத்து என்பதை வாபஸ் பெறாவிட்டால் விவசாயிகளை ஒருங்கிணைத்து மாபெரும் போராட்டத்தை தமிழகம் முழுவதும் நடத்துவோம் என்று அவர் கூறினார்.