அமர்ந்துகொண்டே வேலைப்பார்ப்பவர்களுக்கு சர்க்கரை நோய் வரலாம்

கொரோனா காலகட்டம் தற்பொழுது அனைவரையும் வீட்டில் வைத்து சாவியில்லாமல் பூட்டிவிட்டது. அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியே வரும் மக்கள் உலகப்போரின் நடுவில் செல்வது போன்ற பீதியில் செல்கின்றனர். இதோடு அனைவரும் வீட்டிலேயே முங்கியுள்ளனர். வீட்டில் உள்ளவர்கள் என்னசெய்வது என்று தெரியாமல் ஒரே இடத்தில் அமர்ந்து செல்போனை கையில் வைத்துக்கொண்டு உலகையே ஒற்றை கையால் உருட்டி கொண்டு அதே இடத்தில் உறங்கியும் விடுகிறார்கள்.

இந்த நிலை தற்பொழுது மட்டுமல்லாமல் எப்பொழுதும் ஐடி துறை பணியாளர்களும், அலுவலக பணியாளர்களும் வெளிநேரங்களை அமர்ந்தே செய்கின்றனர். இதனால் ஒரே இடத்தில் நீண்ட நேரம், நீண்ட நாட்கள் அமர்ந்திருப்பது பல உடல்நல பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படியில் இது அமைந்துள்ளது.

ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் அமர்வதால் அதிகப்படியான நாம் சற்றும் எதிர்பார்க்காத உடல்நல குறைகள் ஏற்படுகிறது. குறிப்பாக இதயக் கோளாறுகள், அதிகமான உடல் வலி, உடல் எடை அதிகரிப்பு, சீரற்ற உடல் தோற்றம், மூளை பாதிப்பு, நீரிழிவு நோய், வெரிகோஸ் நோய் (நரம்பு சுருக்க நோய்), அதிக மனக் கவலை, தூக்கமின்மை போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

இதயக் கோளாறுகள் : அதிகநேரம் அமர்ந்திருப்பதால் ஏற்படும் பேராபத்துகளில் முதலில் பாதிக்கப்படுவது இதயம் தான். அதிக நேரம் அமர்ந்திருக்கும் போது கெட்டக் கொழுப்புகள் கரைவது குறைந்து, ரத்தக் குழாய்களில் தேங்கி, இதயத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு இதய நோய்கள் வரும்.

அதிகமான உடல் வலி : நாள்பட்ட வலிகளாக கழுத்து வலி, தோல்பட்டை வலி, இடுப்பு வலி, முது வலி ஆகியவை ஏற்படுகிறது என்றால் அதற்கு அதிக நேரம் அமர்ந்திருப்பதேக் காரணம்.

சீரற்ற உடல் தோற்றம் : ஒரே நிலையில் நேராக அமர்ந்திருப்பதால் முதுகுத் தண்டு பாதிப்படைந்து உடல் தோற்றம் சீரற்ற நிலையை அடைந்துவிடும். வீட்டில் லேப்டாப் அல்லது கணினியை நோக்கி தலையை குனிந்தவாறோ, நிமிர்ந்தோ அமர்ந்தாலும் இந்தப் பிரச்சனை வரும். இதனால் உங்கள் உடல் தோற்றம் நீங்களே வெறுக்கும் அளவிற்கு மாறிவிடும்.

மூளை பாதிப்பு : சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் நடத்திய ஆராய்ச்சியில் அதிக நேரம் உட்கார்ந்து அலுவலகப் பணி செய்தாலும், மற்ற எந்த வேலைகளை செய்தாலும் நிஞாபக மறதி அதிகரிப்பதாகக் கண்டறிந்துள்ளது. மூளையில் நினைவுத் திறனை அதிகரிக்கச் செய்யும் நரம்புகள் விரைவில் பாதிப்படைகிறதாம். இதனால் புதிதாக நாம் சேகரிக்கும் நினைவுகளை அழித்துவிடுகிறதாம்.

உடல் எடை அதிகரிப்பு : எடைக் குறைக்க என்ன முயற்சிகள் மேற்கொண்டாலும் நீண்ட நேரம் அமர்ந்தே இருந்தால் அதில் பயன் இல்லை. உடலில் எந்தவித ஆற்றலும் இல்லாத பட்சத்தில் கெட்ட கொழுப்பு, கெட்ட நீர் வெளியேறாமல் தேங்கி உடல் எடையை அதிகரித்துவிடும்.

நீரிழிவு நோய் வரலாம் : நார்வெயின் பல்கலைக்கழகம் நடத்திய ஹண்ட் என்கிற ஆராய்ச்சியில் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்வோருக்கு நீரிழிவு நோய் அதிகரிப்பதாகக் கண்டறிந்துள்ளது. நீரிழிவு நோய் இல்லாதவர்களுக்கு நிச்சயம் வரக் கூடும் என்றும் எச்சரிக்கிறது.

வெரிகோஸ் நோய் (நரம்பு சுருக்க நோய்) : அதிக நேரம் அமர்ந்திருப்பதால் கால் வலி அதிகமாகும். இதன் தொடர்ச்சியாக கால் நரம்புகளில் வீக்கம் ஏற்படும். இதனால் வெரிகோஸ் எனப்படும் நரம்பு சுருட்டல் நோய் வரும். இன்று பலரும் இந்த நோயால் அவதிப்படுகின்றனர். அதற்கும் உடல் ஆற்றல் இல்லாத வேலைகள் அதிகரித்திருப்பதேக் காரணம்.

அதிக மனக் கவலை : அதிக நேரம்  அமர்ந்தே இருப்பதால் மனதளவில் தனிமையை ஏற்படுத்துகிறது. இதனால் மனக் கவலை அதிகரிக்கிறது. தூக்கமின்மை பிரச்சனையினால் மனத் தொந்தரவுகள் அதிகமாகிறது. இதனால் எப்போது சோர்வான தோற்றத்திலேயே இருப்பீர்கள். உடல் அளவில் சுருசுப்பாக இருக்க முடியாமல் போகும்.

தூக்கமின்மை அதிகரிக்கும்: கணினி, லாப்டாப், செல்ஃபோன், டிவி முன்பு அதிக நேரம் அமர்ந்திருந்தால் அதன் வெளிச்சம் கண்களை பாதிப்படைய செய்கிறது. இதனால் நம் தூக்க முறையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சுறுசுறுப்பாக குறைய இதுவும்காரணம்.

நீங்கள் அதிகபட்சமாக பெரிதாக எதுவும் செய்ய வேண்டாம். அரை மணி நேரத்திற்கு ஒரு முறை எழுந்து நடக்கலாம். 30 நிமிடங்களுக்கு ஒரு முறை கைக் கால்களை வீசுங்கள். இடுப்பை இருபுறமும் வலையுங்கள். முடிந்தால் சிம்பிள் உடற்பயிற்ச்சி ஏதேனும் செய்யுங்கள். இவ்வாறு செய்வதால் மேலே குறிப்பிட்ட நோய்களிலிருந்து விலகி இருக்கலாம்.